Published : 26 Dec 2023 08:26 PM
Last Updated : 26 Dec 2023 08:26 PM

வெளிநாடுகளில் வேலை... போலி ஏஜென்சிகளிடம் எச்சரிக்கை! - மத்திய அரசு அலர்ட்

பிரதிநிதித்துவ படம்

புதுடெல்லி: வெளிநாடுகளில் வேலை தேடுவோர் போலி முகமைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பதிவு செய்யப்படாத போலி ஆட்சேர்ப்பு முகவர்களால், வேலை வாய்ப்பு தருவதாக ஏமாற்றப்படுவதாலும், ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாலும், வெளிநாட்டு வேலை தேடுபவர்களில் ஏமாற்றப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தப் பதிவு செய்யப்படாத, சட்டவிரோத முகவர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து உரிமம் பெறாமல் செயல்படுகிறார்கள். இது வெளிநாட்டில் வேலை செய்வதற்கான எந்தவொரு ஆட்சேர்ப்புக்கும் கட்டாயமாகும். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் பல சட்டவிரோத முகவர்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகமைகள் அவர்கள் இருக்கும் இடம் மற்றும் தொடர்புகள் பற்றிய சிறிய அல்லது எந்த விவரங்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழக்கமாக வாட்ஸ்அப் மூலம் மட்டுமே தொடர்புகொள்கிறார்கள். இதனால் அழைப்பவரின் இருப்பிடம், அடையாளம், வேலை வாய்ப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது கடினம்.

இத்தகைய முகவர்கள் கடினமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் வேலை செய்ய தொழிலாளர்களை ஈர்க்கிறார்கள். பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சில வளைகுடா நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், இஸ்ரேல், கனடா, மியான்மர் மற்றும் லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றில் பணிபுரிய ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இதுபோன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

வெளிநாட்டு தொழில் வழங்குனர், ஆட்சேர்ப்பு முகவர், புலம்பெயர்ந்த தொழிலாளி ஆகியோரால் முறையாக கையொப்பமிடப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தத்துடன் செல்லுபடியாகும் வேலை வாய்ப்பும் வருகிறது. வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் வழங்கப்படும் வேலையின் காலம், நிபந்தனைகள், சம்பளம், பிற ஊதியங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

செல்லுபடியாகும் வேலை வாய்ப்புகள், தொழிலாளர் சுற்றுலா விசா தவிர்த்து, வேலைவாய்ப்பு அல்லது வேலை விசா அல்லது இதே போன்ற பிற விசாவின் அடிப்படையில் குடியேற அனுமதிக்க வேண்டும். சுற்றுலா விசாவை சுற்றுலா நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, புகழ்பெற்ற வெளிநாட்டு முதலாளிகள் விமானக் கட்டணம், உணவு தங்குமிடம், காப்புறுதிக்கான செலவுகளை வழங்குகிறார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அந்நாட்டின் உள்ளூர் நிலைமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். புறப்படுவதற்கு முந்தைய நோக்குநிலை பயிற்சி (பி.டி.ஓ.டி) மையங்களில் கலந்துகொள்வதன் மூலமோ அல்லது செல்ல விரும்பும் நாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட இந்திய தூதரகத்தின் சமூக நலப் பிரிவிலிருந்தோ தகவல்களைப் பெறலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் (பிபிபிஒய்) இணைவதற்கு பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது இறப்பு வழக்குகள், வேலையில் ஏற்பட்ட காயம், மருத்துவ செலவுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மற்றும் ஒரு முறை பிரீமியம் (இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.275 மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.375) உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் வேலை தேடும் நபர்கள் பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் (ஆர்.ஏ) பாதுகாப்பான மற்றும் சட்ட சேவைகளை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆர்.ஏக்களுக்கும் ஒரு உரிம எண் வழங்கப்படுகிறது. இது அவர்களின் அலுவலக வளாகங்களிலும் செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அவர்களின் விளம்பரங்களிலும் முக்கியமாகக் காட்டப்படுகிறது.

வருங்கால புலம்பெயர்ந்தோர் www.emigrate.gov.in அரசு இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஆர்.ஏ.வின் உண்மைத்தன்மையை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். "செயல்பாட்டில் உள்ள ஆர்.ஏ பட்டியல்" இணைப்பில் சென்று பார்வையிடவும்.புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

குடிபெயர்பவரின் பாதுகாவலர் - சென்னை, வெளியுறவு அமைச்சகம்,
ராயலா டவர்ஸ் எண் 2, நான்காம் மாடி, பழைய எண் 785, புதிய எண் 158, அண்ணா சாலை, சென்னை - 600 002.
தொலைபேசி எண் : 044- 28521337, 044- 28522069, 044- 28525610
தொலைபேசி எண் : 90421 49222
மின்னஞ்சல்: poechennai1@mea.gov.in & poechennai2@mea.gov.in
சமூக ஊடகம் : www.twitter/poechennai.com
www.facebook/poechennai.com
www.instagram/poechennai.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x