

சென்னை: போலி பாஸ்போர்ட், விசா மூலம் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ராமநாதபுரத்தை சேர்ந்த ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரி மத்திய குற்றப்பிரிவு போலீஸில் கடந்த மாதம் 7-ம்தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘தமிழகத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவைஆய்வு செய்தபோது, அவை போலி என்பது தெரியவந்தது. எனவே, போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயற்சி செய்த அந்தோணிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
தகுதி இல்லாத நபர்களை...: புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணிசாமியை கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரை சேர்ந்த முகமது புரோஷ்கான் (45), புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த சையது அபுதாஹீர் ஆகியோர் ஏஜென்ட் என்ற போர்வையில் போலியாக பாஸ்போர்ட், விசா தயாரித்து, வெளிநாடுகளுக்கு செல்ல தகுதி இல்லாத நபர்களை பணம் பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை குற்றப்பிரிவு உதவி ஆணையர் சரஸ்வதி,உதவி ஆய்வாளர்கள் எமர்சன் வித்தாலிஸ் ஆகியோர் தலைமையிலான, தனிப்படை போலீஸார், முகமது புரோஷ்கானை கைது செய்தனர். அப்போது, புரோஷ்கான் வீட்டிலும், தலைமறைவாக உள்ள சையது அபுதாஹீர் வீட்டிலும் தனிப்படை போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
போலி அரசாங்க முத்திரை: இந்த சோதனையில், 105 பாஸ்போர்ட்கள், போலி விசா ஆவணங்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு ஆவணங்களில் பயன்படுத்துவதை போன்று போலி அரசாங்க முத்திரை மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயர்களில் முத்திரைகள், தயாரிப்பு ஆவணங்கள், கணினி, பிரிண்டர், பணம் எண்ணும் இயந்திரம், ரூ.57,000 ரொக்கம், சிங்கப்பூர் பணம் 1000 டாலர், தாய்லாந்து நாட்டு பணம் 15500 (பாத்) ஆகியவற்றை பறிமுதல் செய்து, புரோஷ்கானை சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள சையது அபுதாஹீரை போலீஸார் தீவிரமாக தேடிவரும் நிலையில், இதுபோல், எத்தனை பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர், இவர்களுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.