

சென்னை: மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்கள், இளங்கலை, முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அரசு வேலைவாய்ப்புகளை அறியும் வகையிலும், உயர் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணைய வழி வெப்பினார் நிகழ்ச்சி கடந்த செப். 30, அக். 1-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்தது.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்து ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு பேசியதாவது: இந்திய அரசின் மூன்று அனைத்திந்திய அரசுப் பணிகளில் ஒன்று இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்). மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட செயல்களை நிர்வகித்து வருகிறது.
மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர், பல்வேறு தளங்களிலும் செயலாற்ற வேண்டும்.
வருவாய் மேலாண்மை, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்தல், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் இவர்களது பங்கு மிகவும் முக்கியமானது.
உலகளாவிய பணி வாய்ப்புகளில் ஒன்றாகத் திகழ்வது இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்). ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் ஆகியவற்றில் உள்ள பணி வாய்ப்புகளை அறிந்துகொண்டு, அதற்கான தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் ஆர்.ஆனந்தகுமார் பேசியதாவது: 1995-ல் கல்லூரியில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வந்து பேசியது, நானும் அப்பணியில் சேர வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது. ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும்போது, எந்த விஷயத்திலும் தீர்மானமான முடிவெடுக்கும் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆழமாக ஆராய்ந்து, தர்க்க ரீதியாக முடிவு எடுக்கிறோமா அல்லது உணர்வு ரீதியாக எடுக்கிறோமா என்பது முக்கியமானது. யுபிஎஸ்சி தேர்வுக்கான தயாரிப்பில், மிகுந்த ஈடுபாட்டுடன் தயாராக வேண்டும். இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, சரியான தயாரிப்பில் ஈடுபடுவதே வெற்றிக்கான வழி. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் பேசும்போது, "பிளஸ்-2 முடித்துவிட்டு இன்ஜினீயரிங்கில் சேர்ந்தாலும், சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் மேலோங்கி இருந்தது. வெளியுறவுப் பணியில் இருக்கும் ஐஎஃப்எஸ் அதிகாரியின் பணி, இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளுடன் தொடர்புடையது.
எனவே, செயல்பாடுகளில் தெளிவும், புரிதலும் அவசியம். ஒவ்வொரு நாட்டிலும் பணிபுரியும்போது, நல்ல அனுபவங்களைப் பெறவும், புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் வெளியுறவுத் துறை மிகுந்த வாய்ப்பு அளிக்கும். அதேபோல, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் வாய்ப்புகளும் அமையும். பல பொறுப்புகளுடன், சிறந்த செயல்களை முன்னெடுத்துச் செல்லும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும்" என்றார்.
நிகழ்வுகளை பார்க்க வாய்ப்பு: இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர். இந்த நிகழ்வுகளைப் பார்க்கத் தவறியவர்கள் https://www.htamil.org/DKNPS02E03, https://www.htamil.org/DKNPS02E04 ஆகிய இணைப்புகள் வழியாகவோ அல்லது இத்துடன் உள்ள க்யூஆர்கோடு மூலமாகவோ பார்த்துப் பயனடையலாம்.