

20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கட்டுப்பாட்டில் இருந்து மாநகராட்சி ஆணையர் சித்ராவின் முயற்சியால் மீட்கப்பட்டது.
இந்த சமுதாயக்கூடம், தற்போது பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் தொழிற்பயிற்சி கூடமாக மாறியுள்ளது. மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் சலுகை கட்டணத்தில், பொதுமக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களை நடத்த 50-க்கும் மேற்பட்ட சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டன.
ஆரம்பத்தில் இந்த சமுதாய கூடங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ள முறையில் பயன்பட்டு வந்தன. நாளடைவில் ஒரு சில சமுதாயக் கூடங்கள், அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர் கட்டுப்பாட்டுக்குள் சென்றன. மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல், அவர்களே சமுதாயக்கூட்டத்தை வாடகைக்கு விட்டு தனி நபர்கள் லாபமடைந்து வந்தனர்.
மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்றபிறகு, 100 வார்டுகளிலும் உள்ள சமுதாயக் கூடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை மீட்கப்பட்டன. அதன்படி 3-வது மண்டலம் 54-வது வார்டு தெற்கு வெளி வீதி அருகே குப்புபிள்ளை தோப்பு 2-வது தெருவில் உள்ள சமுதாயக் கூடம் 20 ஆண்டுகளாக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அவர் இந்த சமுதாயக் கூடத்தின் வருவாயை மாநகராட்சிக்கு வழங்காமல் பயன்படுத்தி வந்ததால், அப்பகுதி மக்கள் இந்த மண்டபம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதையே மறந்து விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் சித்ரா, அந்த சமுதாய கூட்டத்தை நேரில் சென்று ஆய்வு செய்து மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். தற்போது அந்த சமுதாயக்கூடம் மகளிர் சுய உதவிக்குழுவினர் பயிற்சிபெறும் தொழில் பயிற்சி கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
54-வது வார்டு கவுன்சிலர் நூர்ஹகான்
இதுகுறித்து 54-வது வார்டு கவுன்சிலர் நூர்ஹகான் கூறுகையில், இந்த சமுதாயக் கூடத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கொண்டு மகளிர் குழுவினருக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு, தையல் பயிற்சி, ஆரி ஒர்க் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற மகளிர் தனியாக தொழில் தொடங்க வழிகாட்டும் தொழில் அனுபவ பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இவர்கள் வாழை மட்டை நாரில் இருந்து தயாரிக்கும் கூடைகள், மேட் போன்றவை வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் 40 பெண்களுக்குத் தான் காந்திகிராமத் தொழில் மேம்பாட்டு திட்டத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதில், 10 பேர் இந்த மண்டபத்தில் தற்போது பயிற்சிபெற்று வருகின்றனர். இங்கு 50 பெண்கள், தொழில் பயிற்சி பெறுகிறார்கள். அடுத்து பயிற்சிபெற 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தொழில் பயிற்சி தவிர மற்ற நேரங்களில் ஏழை, எளிய மக்கள் வீட்டு விசேஷம் நடத்த வாடகைக்கு விட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார்.