

கோவை: உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு ஏற்றம், நாளுக்கு நாள் உயரும் தங்கம், வெள்ளி விலை, ஜிஎஸ்டி உட்பட பல்வேறு சிரமங்கள் தொழில் துறையில் நிலவி வரும் நிலையில், மத்திய பட்ஜெட் தொழில் துறையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்க வேண்டும் என்ற கோவை தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:
கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிபாகம் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சவுந்திரக்குமார்: தொழில்துறையில் தாமிரம் மிக முக்கிய கனிமமாக இருக்கிறது. தாமிரத்தின் விலை கடந்த ஒரு மாத காலத்துக்குள் கிலோ ரூ.950-ல் இருந்த நிலையில் தற்போது ரூ.1300-ஆக உயர்ந்துள்ளது.
சில்வர், இரும்பு, காஸ்டிங், அலுமினியம் உட்பட பல்வேறு பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்திருப்பதால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருட்களுக்கு தேவையான பொருட்களின் விலை கட்டுக்கடங்காத நிலையில் உயரும்போது, பொருட்களின் விலையும் உயரவே செய்யும்.
நாள்தோறும் மாறிவரும் விலையேற்றத்துக்கு முடிவு கட்டும் வகையில் நிலையானதொரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். வெட்கிரைண்டர் உள்ளிட்டவைகளுக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
தெற்கு இந்திய தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தக சங்கம் (புல்லியன்) தலைவர் கார்த்திக்: கடந்த பட்ஜெட்டின்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரமாக ஆக இருந்தது. தற்போது இரட்டிப்பாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில், விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. வரும் பட்ஜெட்டில் நகை மீதான சுங்க வரியை உயர்த்தாமல் இருந்தால், அது தொழில் துறைக்கு பலன் தரும்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்: விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய முக்கியமான பொருள் மோட்டார் பம்ப் செட் ஆகும். வாட் வரியில் 5 சதவீதமாக இருந்ததை, ஜிஎஸ்டி மூலம் 18 சதவீதமாக மாற்றி உள்ளனர். இதன் விலை உயரும்போது இயல்பாகவே விவசாயிகளும், நாட்டின் வேளாண்மைத்துறையும் பாதிக்கப்படும். மீண்டும் 5 சதவீதமாக வரியை குறைக்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சொத்து பிணை இன்றி, 13 சதவீதம் வட்டியுடன் கடன் வசூலிக்கப்படுகிறது. இது தவிர ஆண்டுக்கு காப்பீடு உள்ளிட்டவற்றை காரணங்காட்டி ரூ.50 ஆயிரம் வரை பிடித்தம் செய்கிறார்கள். தொழிலுக்காக வாங்கும் கடனுக்காக 6 சதவீதம் மட்டும் வட்டி வசூலிக்க வேண்டும். நூற்றாண்டு காலமாக ஜாப் ஒர்க் பணிகளுக்கு வரி இல்லாமல் இருந்த நிலையில், ஜிஎஸ்டி 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பை முற்றிலும் நீக்கம் செய்ய வேண்டும்.
சின்னவேடம்பட்டி தொழில் முனைவோர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி தேவகுமார்: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பொறுத்தவரை, இந்தியாவில் கோவை 5-ம் இடத்தில் உள்ளது. சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, உடையாம்பாளை யம் மற்றும் சரவணம்பட்டியில் சிறு, குறு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.
தாமிர விலையேற்றத்தால் இன்றைக்கு வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப் உற்பத்தி மற்றும் கம்ப்ரஸர் உள்ளிட்ட தொழில்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. மோட்டார் பயன்பாட்டிலும், கம்ப்ரஸர் தொழில்துறையிலும் தாமிரம், அலுமினியம் இன்றி எந்த வேலையும் செய்ய முடியாது. அலுமினியத்தின் விலையும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற எதிர்பாராத விலையேற்ற காலங்களில் மத்திய அரசு கடனுதவி வழங்க வேண்டும். தொழில்துறை பகுதிகளில் மூலப்பொருள் வங்கிகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தொழில்துறைக்கு தேவையான மூலப் பொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும். அதேபோல் தேவையான கடனுதவி வழங்க வேண்டும்.
குறு நிறுவனங்களுக்கான மானியத்தை 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை இழுத்தடிக்காமல், ஓராண்டுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.