

தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க, மூத்த பொருளாதார நிபுணரும், திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட ‘வருவாய் பெருக்கக் குழு’ நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மாண்டேக் சிங் அலுவாலியா உடன் தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பொருளாதாரத் துறைத் தலைவர் கே.பி.கிருஷ்ணன், ஐஎம்எஃப் நிதி விவகாரத்தின் பொருளாதார வல்லுநர் அர்பிந்த் மோடி, மத்திய கலால் வரி மற்றும் சுங்கவரி வாரிய முன்னாள் தலைவர் நஜீப் ஷா, தமிழக அரசின் நிதித் துறை கூடுதல் செயலர் எம்.ஏ.சித்திக், எம்ஐடிஎஸ் இயக்குநர் எம்.சுரேஷ் பாபு ஐஏஎஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை ஏற்கெனவே முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெளியிட்டது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப வருவாயை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும், வள ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதால் இந்தக் குழுவை அமைத்திருக்கிறது.
யார் இந்த மாண்டேக் சிங் அலுவாலியா?
மாண்டேக் சிங் அலுவாலியா கடந்த 1943-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி பிரிக்கப்படாத இந்தியாவாக இருந்தபோது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பிறந்தவர். செகந்திராபாத்தில் உள்ள புனித பாட்ரிக் பள்ளியிலும், டெல்லியில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியிலும் படித்தார். டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். அதன்பின், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் முதுகலையும், புனித அந்தோணி கல்லூரியில் எம்.பில் பட்டமும் பெற்றார்.
1968-ம் ஆண்டு தனது 28-வது வயதில் அலுவாலியா உலக வங்கிப் பணியில் சேர்ந்தார். வருவாய் பகிர்வு துறையில் பொறுப்பாளராகப் பதவி ஏற்ற மிக இளம் அதிகாரி என்ற பெயரையும் அலுவாலியா பெற்றார். 11 ஆண்டுகள் உலக வங்கியில் பணியாற்றிய அவர், 1979-ம் ஆண்டு இந்திய அரசின் நிதித்துறையின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமரின் சிறப்பு செயலர், வர்த்தகத் துறை செயலர், பொருளாதார விவகாரத் துறை செயலர், நிதித்துறை செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
திட்டக்குழு அனுபவம்
1998-ம் ஆண்டு திட்டக்குழுவின் உறுப்பினராக அலுவாலியா நியமிக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு முதல் 2004 வரை ஐஎம்எஃப் அமைப்பில் பணியாற்றினார். 2004-ம் ஆண்டு ஜூனில் ஐஎம்எஃப் பதவியிலிருந்து விலகிய அவர், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சியில், 11-வது மற்றும் 12-வது திட்டக்குழுவின் பணிகளை தயாரித்து, அதனை செயல்பாட்டிலும் கொண்டு வந்தார். 2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் திட்டக்குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 2011-ம் ஆண்டில் இவரின் பொதுச் சேவையைப் பாராட்டி ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்டது.
இந்தியப் பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள், கல்வி, கிராமப்புற பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகளை புகழ்பெற்ற நாளேடுகளிலும், இதழ்களிலும் எழுதியுள்ளார்.
‘எம்’ - ஆவணம் நாயகன்
1990-களில் இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையை பின்பற்றத் தொடங்குவதற்கு அடித்தளமிட்ட, முன்னோடி பொருளாதார ஆலோசகர் மாண்டேக் சிங் அலுவாலியாதான். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிறப்புச் செயலாளராக இருந்த காலத்தில் ‘தொழில் துறை, வர்த்தகம் மற்றும் நிதிக் கொள்கைகள் மறுசீரமைப்பு ஆவணம்’ என்று பெயரில் ரகசிய ஆவணத்தை அலுவாலியா தயாரித்தார்.
இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்கவும், சீர்திருத்தங்களுக்கான ‘ப்ளூபிரின்ட்’டாகவும், மையப் புள்ளியாகவும் இந்த ஆவணம் விளங்கியது. ஆனால், 34 பக்கங்கள் கொண்ட அலுவாலியா தயாரித்த இந்த ஆவணம் ஊடகங்களுக்குக் கசிந்து பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியதால் ஓரங்கட்டப்பட்டது.
குழுவின் பணிகள் என்ன?
> மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான 6 பேர் கொண்ட தமிழகத்தின் ‘வருவாய் பெருக்கக் குழு’வின் பணிகள் இவை:
> வரி மற்றும் வரி சாராத பிரிவில் வளர்ச்சியைக் கொண்டுவருதல். மாநில வருவாயை நிலையான முறையில் அதிகரிக்கவும், நிதி ரீதியான சுயசார்பை மேம்படுத்தவும் வழிமுறைகளைப் பரிந்துரைத்தல்.
> வருவாய் கசிவைத் தடுத்தல், வரி ஏய்ப்பைத் தடுத்தல், நிர்வாகக் குறைபாடுகளைச் சரிசெய்தல் மற்றும் வரித் துறைகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான வழிகளைக் கண்டறிதல்.
> மதுபானக் கொள்கை மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகளில் தேவைப்படும் மாற்றங்கள், வரி விகிதங்கள், கட்டணங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள், மற்றும் வரி விலக்குகள் ஆகியவற்றை மறு ஆய்வு செய்தல்.
> புதிய வருவாய் இனங்களைக் கண்டறிதல், அரசின் தேவையற்ற சொத்துகளை விற்று பணமாக்குதல், நிலங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுத்துறை ஈவுத்தொகை போன்ற குறைந்த பயன்பாட்டில் அல்லது முழுமையாகப் பயன்படுத்தப்படாத நிதி ஆதாரங்களைக் கண்டறிதல்.
> மாநிலத்தின் நிதி ஆவணங்களை ஆய்வு செய்து, 3 மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வப் பரிந்துரைகளை தமிழக அரசுக்கு உயர்மட்டக் குழு அளிக்கும்.
> மாநிலத்தின் எந்தவொரு அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனம், வாரியம் அல்லது வருவாய் வசூலிக்கும் அமைப்பிடம் இருந்து ஆவணங்கள், விவர அறிக்கைகள், விவரங்கள் அல்லது அறிக்கைகளைக் கோருவதற்கு இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் நேரில் ஆஜராகித் தகவல்களை வழங்கவும் உத்தரவிடலாம்.
> துறைத் தலைவர்கள், களப்பணி அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் அல்லது பிற வல்லுநர்களை தற்காலிக, சிறப்பு அழைப்பாளர்களாக இக்குழு இணைத்துக்கொள்ள முடியும்.