

சென்னை: தங்கத்தின் விலை ரூ.1.5 லட்சத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம், தங்கம் மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு பவுன் தங்கம் அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆகவும், டிச.12-ம் தேதி ரூ.98,960 ஆகவும் உயர்ந்தது. பின்பு, 3 நாட்களுக்கு அதே விலையில் நீடித்த நிலையில், டிச.15-ல் ரூ.1 லட்சத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. அன்றைய தினம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது.
இதன்பிறகு, சிறிது ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில் தங்கத்தின் விலை டிச.23-ல் ரூ.1.2 லட்சத்தை தாண்டி, மீண்டும்வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன் பிறகு, படிப்படியாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுனுக்கு காலையில் ரூ.880-ம், மாலையில் ரூ.800-ம் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.13,100 ஆக இருந்தது.
வெள்ளி விலையும் புதிய உச்சம்: இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.31 உயர்ந்து, ரூ.285 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.31 ஆயிரம் உயர்ந்து, ரூ.2.85 லட்சமாகவும் இருந்தது. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: இனி தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது. வரும் மார்ச்சுக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.15 ஆயிரத்தையும், ஒரு கிராம் வெள்ளி ரூ.500-யும் தொட்டுவிடும்.
சர்வதேச அளவில் பொருளாதார மந்தம், அமெரிக்க ஃபெடரல் வங்கிவைப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு, தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீட்டாளர்கள் அதிக அதிக அளவில் முதலீடு செய்வது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளியை தொழில்துறையினர் அதிக அளவில் வாங்கி குவித்து வருகின்றனர். இதனால், இதன் விலையும் அதிரடியாக உயர்கிறது.இவ்வாறு அவர் கூறினர்.