‘பீஜிங் வேண்டவே வேண்டாம்...’ - அலறும் சீன இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு?

‘பீஜிங் வேண்டவே வேண்டாம்...’ - அலறும் சீன இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு?
Updated on
3 min read

உலகின் 2-வது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது பீஜிங், ஷாங்காய் நகரங்கள். பீஜிங் நகரை ‘குளோபல் சிட்டி’ என்று அழைப்பார்கள். கலாசாரம், தூதரக உறவுகள், அரசியல், நிதி, வர்த்தகம், தொழில், பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, மொழி, சுற்றுலா, ஊடகம், விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் கலை ஆகிய அனைத்துக்கும் பீஜிங் நகரம்தான் தலைமையகம்.

மனிதர்களின் கலாச்சார, நாகரிக பரிணாமத்தில் இடப்பெயர்வு, நகர்தல் முக்கியமானது. இடப்பெயர்வு அடிப்படையில்தான் பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தது. காலப்போக்கில் கோடிக்கணக்கான மக்கள் கிராமங்களையும் சிறிய நகரங்களையும் விட்டு நகர்ப்புறத்தை நோக்கி நகர்ந்து கட்டமைத்தனர்.

பீஜிங் நகரம் வளரத் தொடங்கிய காலக் கட்டத்தில் மக்கள் நல்ல வாழ்வாதாரத்துக்காகவும், உயர்ந்த வாழ்க்கைத் தரத்துக்காகவும் பீஜிங் நோக்கி நகர்ந்தனர். இதனால் புலம்பெயர்ந்தவர்களின் நகராக பீஜிங் மாறியது.

கடந்த 1990-களில் 1.10 கோடி மக்கள் பீஜிங் நகரில் வசித்த நிலையில், இப்போது 2.10 கோடி மக்களாக பெருகிவிட்டனர். சீனாவின் மலைப் பகுதிகளிலும், கடைக்கோடி கிராமங்களிலும் பிறந்து வாழ்ந்த எண்ணற்ற மக்களுக்கு பீஜிங் நகரம்தான் முகவரி அளித்து, வெற்றியின் அடையாளத்தை காண்பித்திருக்கிறது.

எங்கே போனது இரட்டை இலக்க வளர்ச்சி?

சீனாவின் பொருளாதாரத்தில் கடந்த தசம ஆண்டுகளாக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உலக நாடுகளை மிரட்டிய நிலையில், தசாப்த ஆண்டுகளாக இல்லாத அளவு குறைந்துவிட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாகத் திகழ்ந்த சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆகிய இரட்டைத் தாக்கங்கள், வணிகம் மற்றும் மக்களின் சேமிப்பு நம்பிக்கையை சிதைத்துவிட்டன.

உலகளவில் கொரோனா பரவல் கொடுமை குறைந்த நிலையில்கூட சீனா மட்டும் கட்டுபாடுகளைத் தளர்த்தவில்லை. இதனால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. கொரோனா பரவல் சீன மக்களுக்கு சேமிப்பு என்றால் என்ன? அதே எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்துவிட்டு சென்றது.

ஏனென்றால், கொரோனாவுக்கு முன்பாக, சீன மக்கள் தங்கள் சேமிப்பில் பெரும் பகுதியை பணமாக வைக்காமல், நிலம் அல்லது வீடுகளில் முதலீடு செய்திருந்தனர். ஆனால், கொரோனா பரவல் முடிந்த பின் ரியல் எஸ்டேட் துறை வரலாற்றில் இல்லாத அளவு சரிந்ததால் திடீரெனத் தாங்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டதாக மக்கள் உணர்ந்தனர்.

இதனால் கொரோனாவுக்கு பின் மக்கள் செலவை பாதியாகக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்தினர். மக்களின் நுகர்வும் குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் துறை பெரும் மந்த நிலையை சந்தித்ததால், வேலை கிடைப்பதும் கடினமாக மாறியது.

சீனப் பொருளாதாரத்தில் மாற்றம் வரும் என எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. கடந்த காலங்களில் இருந்த இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது.

சமீபத்தில் ஜூன் மாதத்தில் முடிந்த காலாண்டில்கூட சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 4.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. சீன அரசு 5 சதவீதமாக இருக்கும் என கணித்த நிலையில் அது சரிந்தது.

சீனாவின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டு ஜூனில் இருந்ததைவிட 27 சதவீதம் அதிகம் என்றாலும், உள்நாட்டில் மக்களின் நுகர்வு உயரவில்லை, மக்களின் வாங்கும் பழக்கத்தை அதிகப்படுத்த சீன அரசு கடுமையாகப் போராடி வருகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை மற்றும் உலக விவகாரங்கள் பிரிவு பேராசிரியர் ஜூலியட் லூ கூறுகையில் “சீன மக்கள் தங்கள் சேமிப்பை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் கட்டாயத்துக்கு ஆளாகினர்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளால், சிக்கனமாகவும் மாறினர். சாமானியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிவிட்டனர். சீன மக்களின் நலன் மற்றும் உழைப்பை அடமானம் வைத்துதான், உலகுக்கு மலிவான பொருட்களும் ஏற்றுமதிகளும் கிடைக்கின்றன” எனத் தெரிவித்தார்.

பீஜிங்கில் இருந்து தப்பிக்கிறோம்...’

வந்தோரை வாழவைத்த பீஜிங் நகரம் இன்று, மக்களின் வாழ்வாதாரத்தை பிடுங்கும் கொடுநகராக மாறிவிட்டது. இதற்கு நகரைக் குறை கூற முடியாது, அங்குள்ள காஸ்ட்லி வாழ்க்கைத் தரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், இளைஞர்கள் தங்களின் பீஜிங் கனவை மூட்டை கட்டிவிட்டு வேறு நகரத்துக்கு திரும்புகிறார்கள்.

சீனாவின் சமூக வலைத்தளங்களில் ‘எஸ்கேப்பிங் பீஜிங்’ என்ற ஹேஷ்டேக் பரவலாக கவனத்தை ஈர்ப்பதோடு, சீன இளைஞர்களின் எதிர்கால முடிவுகளையும் பறைசாற்றுகின்றன. பீஜிங் நகரில் வீட்டு வாடகை அதிகம், வேலைவாயப்பில் கடும் போட்டி, எதிர்கால வாழ்க்கை குறித்து தெளிவற்ற போக்கு, அதிக செலவு பிடிக்கும் காஸ்ட்லி வாழ்க்கைத் தரம் ஆகியவை இளைஞர்கள் இந்த முடிவு எடுக்க காரணமாக இருந்துள்ளது.

‘996’ வேலைக் கலாசாரம்

அது மட்டும்லலாமல் பீஜிங் நகரில் பணி நேரம் அதிகம், ஊதியம் குறைவு என்பதாலும், முழுநேர வேலை கிடைக்கவில்லை என்பதாலும், இந்த நகரை நம்பி வந்த எண்ணற்ற இளைஞர்கள் ஏமாற்றத்துடன் புறப்பட்ட இடத்துக்கே செல்லத் தொடங்கிவிட்டனர்.

பீஜிங் நகரம் என்று பெரும் வசதி படைத்தவர்களுக்கான நகரமாக மாறிவிட்டது. சாதாரண தொழிலாளர்கள், ஊழியர்களால் தங்களின் ஊதியத்தை சேமிக்க முடியவில்லை. வேலை செய்து கிடைக்கும் ஊதியம் அத்தியாவசிய செலவுகளுக்கே சரியாக இருக்கிறது. இதில் டேட்டிங், சுற்றுலா என்று சென்றால், ஊதியம் சிறிதுகூட மிஞ்சாது என்று இளைஞர்கள் வேதனைப்படுகிறார்கள்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும் என்பதற்காக ‘996’ விதிகள் பின்பற்றப்பட்டு பணிக் கலாச்சாரம் மாறியுள்ளது. அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை வேலை, வாரத்துக்கு 6 நாட்கள் பணி என்பதுதான் சூட்சமம். இந்த பணிக் கலாச்சாரம் அலிபாபா நிறுவனர் ஜேக் மா போன்றவர்களுக்கு பிடித்திருந்தாலும், இளைஞர்களுக்கு நம்பிக்கை தரவில்லை.

சீனாவில் வாழும் வயதானவர்கள், முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமையை இளைஞர்களிடம் பெருமையாகப் பேசி, உயிர் வாழ்வதற்கும் செழிப்பதற்கும் “கசப்பைச் சகித்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள். ஆனால், சீனாவில் நிலவும் மந்தமான பொருளாதார வளர்ச்சியும், பெருகிவரும் கடுமையான போட்டியும் இந்தக் கணக்கீட்டை மாற்றிவிட்டன.

வெற்றி என்பது என்ன தெரியுமா?

சீன இளைஞர்கள் இப்போது நிறைய மாறிவிட்டனர். அதிக ஊதியம், வாழ்க்கையில் வெற்றி அடையாளங்களைத் துரத்திக் கொண்டே இருப்பதற்குப் பதிலாக, கடுமையான போட்டியை நிராகரித்து, எளிமையான வாழ்க்கை முறையைத் இளைஞர்கள் தேர்ந்தெடுகிறார்கள்.

தலைநகர் பீஜிங்கை விட்டு ஏற்கெனவே ஏராளமான இளைஞர்கள் வெவ்வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். பீஜிங்கில் இளைஞர்கள் மனதில் ஒருவிதமான பதற்றம், படபடப்பு, யாருடனும் பேசுவதற்கு தயக்கம், வேலையைத் தக்கவைக்க போராட்டம் ஆகியவற்றில் இறுக்கமாக இருந்ததாக சமூக ஊடகங்களில் தங்களின் வேதனைகளைக் கொட்டித்தீர்த்துள்ளனர்.

ஆனால், மற்ற நகரங்களுக்கு சென்றபின், இளைஞர்கள் மகிழ்ச்சியாக உணர்வதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கிறார்கள். பீஜிங்கில் இருந்ததைவிட, குறைவான அழுத்தத்தையும் பதற்றத்தையும், அதிக நிம்மதியாகவும், சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சீன இளைஞர்களைப் பொறுத்தவரை பீஜிங்கில் வாழ வேண்டும், அங்கேயே செட்டிலாக வேண்டும், மேம்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மாறிவிட்டது. அவர்களின் குழந்தைப் பருவ கனவு மாறி, நிதர்சனம் என்ன என்பதை புரிந்துவிட்டனர்.

வாழ்க்கையில் வெற்றி என்பது சீனாவின் பெரிய நகரங்களை அடைவதும், பணி செய்வதும் அல்ல. நிம்மதியாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் கூடிய இடத்தைக் கண்டறிவதும், நிலையானதாக உணரக்கூடிய ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும்தான் உண்மையானது என்று உணர்ந்துவிட்டனர்.

‘பீஜிங் வேண்டவே வேண்டாம்...’ - அலறும் சீன இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு?
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in