அதிக சர்க்கரை கொண்ட பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்

அதிக சர்க்கரை கொண்ட பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்
Updated on
1 min read

புதுடெல்லி: பாக்கெட் உணவுகளின் ஊட்டச்சத்து சார்ந்த அபாயங்கள் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் முன்புறத்தில் எச்சரிக்கை வாசகக் குறிப்பை அறிமுகப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய குறிப்பை அறிமுகப்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்கக் கூடாதா? குறிப்பாக, வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா? பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை அறிவிப்பு செய்வதில் என்ன தயக்கம்? என கோபமாக கேள்விகள் எழுப்பி, 2 வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க மீண்டும் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இவ்வழக்கில் 6 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பாக்கெட் உணவுகளின் முன்புறத்தில் சிவப்பு நிற அறுகோண வடிவ எச்சரிக்கை லேபிள் இடம்பெறும் என்று முன்மொழிந்துள்ளது.

முதற்கட்டமாக, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் எச்சரிக்கை லேபிள் இடம்பெறும் என்றும், 2-வது கட்டத்தில் ஏதேனும் ஒரு ஊட்டச்சத்து அதிகமாக இருந்தாலே எச்சரிக்கை லேபிள் இடம்பெறும் வகையில் விதிமுறையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதிக சர்க்கரை கொண்ட பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா மீது வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in