

சென்னை: மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) உட்பட பல்வேறு தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் தாமஸ் ஜான் முத்தூட்: மத்திய பட்ஜெட், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. இது உற்பத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது. ‘விக்சித் பாரத் 2047’ தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க ஒரு விரிவான மற்றும் தொலைநோக்கு உத்தியை எடுத்துரைக்கிறது. இந்த பட்ஜெட்டின் சமச்சீரான மற்றும் தொலைநோக்கு அணுகுமுறையை வரவேற்கிறோம்.
சிஐஐ தமிழ்நாடு மாநிலக் குழு தலைவர் உன்னிகிருஷ்ணன்: தமிழகம் பல குறிப்பிடத்தக்க வாய்ப்புகளில் பயனடைய உள்ளது. மின்னணுவியல், மின்சார வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் உயர் மதிப்புள்ள உற்பத்தி, தொழில் துறை முதலீட்டைத் தூண்டி கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வர்த்தகம் மற்றும் தொழில் சபை தலைவர் ராம்குமார் சங்கர்: 2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறோம். இது நிதி ஒழுக்கம், நீடித்த மூலதனச் செலவினம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி அடிப்படைகளை வலுப்படுத்துவதில் ஒரு தெளிவான கவனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் தொலைநோக்கு அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.
உலகளாவிய நிலையற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், வளர்ச்சி சார்ந்த செலவினங்களுடன் நிதி நிலைத்தன்மையைப் பேணுவதில் தெளிவான கவனம் செலுத்துகிறது. பொருளாதார நிலைத்தன்மைக்காக அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த சபை பாராட்டுகிறது.
இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தென் பிராந்திய தலைவர் கோபாலகிருஷ்ணன்: மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறோம். இது வேலைவாய்ப்பு உருவாக்கம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலிமை மற்றும் தொழிலாளர் அடிப்படையிலான ஏற்றுமதி துறைகள், குறிப்பாக நெசவு, வேளாண்மை, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தோல் துறைகளின் வளர்ச்சியை முன்னுரிமைப்படுத்தும் தொலைநோக்கு திட்டமாக உள்ளது.
அப்போலோ மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி: இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சி, ஆரோக்கியமான குடிமக்கள் மற்றும் வலுவான சுகாதார அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. பொது சுகாதாரத் திறனை விரிவுபடுத்துதல், தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களில் சுகாதார வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதாக உள்ளது.
அசோக் லேலண்ட் தலைவர் தீரஜ் ஹிந்துஜா: இந்த பட்ஜெட் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்து, இந்தியாவின் நீண்டகால பொருளாதாரப் பாதையை பலப்படுத்துகிறது.
தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: பல்வேறு நெருக்கடிகளிலும் வேளாண்மை உற்பத்தியை உயர்த்தி சாதனை படைத்த விவசாயிகளுக்கான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் வரும் என எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம்.
தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன செயலாளர் ஏ.சி.மோகன்: வேளாண்மை வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலன் கருதி கடந்த பட்ஜெட்டை விட மிக அதிக தொகையாக ரூ.1.63 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு என்பது பாராட்டத்தக்கது.
இதில் அறுவடை பயிர் பாதுகாப்புக்கு அதிகம் செலவிட மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் அறுவடைக் காலத்தில் திடீர் மழை காரணமாக நெல் பயிர் சேதாரம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது.
இதற்கு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் நெல் உலர்த்தும் சாதனம் நிறுவ பல ஆண்டுகளாக கோரிக்கையை விடுத்து வருகிறோம். இதை நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன்: மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உச்ச வரம்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாத ஊதியம் பெறும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.