ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடம்; உ.பி. 4-ம் இடத்துக்கு முன்னேற்றம்: நிதி ஆயோக்

ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடம்; உ.பி. 4-ம் இடத்துக்கு முன்னேற்றம்: நிதி ஆயோக்
Updated on
2 min read

புதுடெல்லி: ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது; உத்தரப் பிரதேசம் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடல்சார் அல்லாத மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய கடலோர மாநிலங்கள் பிடித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தையும், அதைத் தொடர்ந்து முறையே தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்களில், உத்தரப் பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், உத்தரப் பிரதேசம் ஏற்றுமதியில் ஒட்டுமொத்தமாக 7-வது இடத்திலும், நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்களில் 2-வது இடத்திலும் இருந்தது.

இந்நிலையில், வெறும் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள, இந்த மிகப் பெரிய முன்னேற்றம், உத்தரப் பிரதேச மாநில அரசு ஏற்றுமதித் துறையில் மேற்கொண்ட விரிவான சீர்திருத்தங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கைகளின் நேரடி விளைவாகும் என்று நிதி ஆயோக்கின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ், மாநிலத்தில் ஏற்றுமதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், செலவுப் போட்டித் தன்மையை அதிகரித்தல், பல்வேறு தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் வணிகச் சூழலை எளிதாக்குதல் ஆகியவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புத் திட்டம், பொது வசதி மையங்கள், தளவாடச் சீர்திருத்தங்கள், சாலை இணைப்பு மற்றும் உலர் துறைமுகங்கள் ஆகியவை ஏற்றுமதித் தயார் நிலையை விரைவுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

உ.பி.யில் சரக்குக் கட்டணங்களைத் திரும்பப் பெறுதல், தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகள் மற்றும் வர்த்தக விழாக்களில் பங்கேற்பு, தரச் சான்றிதழ், மின் வணிகத்தில் இணைவதற்கான கட்டணங்கள், கூரியர் மற்றும் விமான சரக்குச் செலவுகள் மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் ஏற்றுமதி கடன் உத்தரவாதங்கள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இவை, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஏற்றுமதியாளர்களின் செலவுச் சுமையைக் குறைத்து, உலகச் சந்தைகளில் அவர்களை மேலும் போட்டித்தன்மை கொண்டவர்களாக மாற்றியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, மாநிலத்தின் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு முக்கிய தளமாகச் செயல்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

நிதி ஆயோக் ஏற்றுமதியின் தூண்களாக, உள்கட்டமைப்பு, வணிகச் சூழல் அமைப்பு, கொள்கை மற்றும் நல்லாட்சி மற்றும் ஏற்றுமதி செயல்திறன் ஆகிய நான்கு உள்ளன. ஏற்றுமதிப் பன்முகத் தன்மையின் விரிவாக்கம், புதிய சந்தைகளில் நுழைவு, தளவாட ஆதரவு அமைப்பின் மேம்பாடு மற்றும் தொழில்துறைக்கு உகந்த கொள்கைகள் ஆகியவை உத்தரப் பிரதேசத்தின் நிலையை வலுப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடம்; உ.பி. 4-ம் இடத்துக்கு முன்னேற்றம்: நிதி ஆயோக்
‘வா வாத்தியார்’ விமர்சனம்: கார்த்தி - நலன் குமாரசாமி காம்போ கலக்கலா, சறுக்கலா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in