

புதுடெல்லி: இந்தியப் பொருட்கள் மீதான 12.5 சதவீத வரியை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவர் அதிபராக பதவியேற்றது முதல் இந்தியா, சீனா, கனடா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். குறிப்பாக, இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. சில பொருட்களுக்கு 12.5 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல மாதங்களாக, பல கட்டங்களாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் 2 வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 12.5 சதவீத வரி திட்டத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று இந்தியா தரப்பில் அண்மையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மத்திய வர்த்தகத் துறை இணை செயலர் பிரிஜ் மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட கூடுதல் வரியை இந்தியாவும், அமெரிக்காவும் கவனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியத் தொழில் துறை கூட்டமைப்பான ஃபிக்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஃபிக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூடுதல் வரியானது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்க உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் இறுதியில் அமெரிக்க நுகர்வோருக்கும் செலவுகளை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரிவிதிப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், 12.5 சதவீத கூடுதல் வரி தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து கலந்தாலோசனை செய்யவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்த 12.5 சதவீத வரியைக் கைவிட வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தும் என்று பிரிஜ் மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.