

கவுதம் அதானி | கோப்புப் படம்
வாஷிங்டன்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் இணை அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க நீதித்துறை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அங்குள்ள மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ், அதானி மீதான குற்றவியல் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன்மூலம், அதானி குழுமத்துக்கு எதிரான பங்குச் சந்தை மோசடி மற்றும் பணப்பரிவர்த்தனை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளன. இனி இதே வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேவேளையில், அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான எஸ்இசி தொடர்ந்த சிவில் வழக்கில், எந்தக் குற்றத்தையும் ஒப்புக்கொள்ளாமல் 18 மில்லியன் டாலர் (சுமார் ரூ.171 கோடி) அபராதம் செலுத்தி வழக்கை முடித்துக்கொள்ள அதானி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், இது தொடர்பான விவரங்களை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்துப் பொய் பிரச்சாரம் செய்து நிதி திரட்டியதாகவும் கூறி கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அதானி மீதான நடவடிக்கைகளைக் கைவிடுவதாக அமெரிக்க நீதித்துறை கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த வழக்கின் பெரும்பகுதி இந்திய எல்லைக்குட்பட்டது என்றும், உள்நாட்டு வழக்குகளில் கவனம் செலுத்துவதற்காக இப்போராட்டம் கைவிடப்படுவதாகவும் அமெரிக்க நீதித்துறை அதிகாரி ட்ரென்ட் மெக்கோட்டர் தெரிவித்தார்.
ஆனால், அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அதானி குழுமம் முன்வந்ததே இந்த வழக்கு தள்ளுபடிக்குக் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. அமெரிக்க முதலீட்டு வாக்குறுதிக்கும் வழக்கு ரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் அதானி தரப்பு உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.