

புதுடெல்லி: சுற்றுப்புறச் சூழல் நன்மையை கருதி ஹைட்ரஜனில் இயங்கும் டொயோட்டாவின் மிராய் காரை பயன்படுத்தி வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தெரிவித்தார்.
டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து வரும் நிலையில் அதுதொடர்பாக மக்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு நிதின் கட்கரி அளித்த பதில்: டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மாற்று எரிபொருள் திட்டங்களுக்கு மத்திய அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
எதிர்காலத்தின் எரிபொருளான ஹைட்ரஜனுக்கு நான் மாறிவிட்டேன். அந்த எரிபொருளில் இயங்கும் டொயோட்டாவின் மிராய் காரை பயன்படுத்தி வருகிறேன். மெர்சிடஸ் போலவே அதிக வசதி கொண்ட சொகுசான கார் அது. மிராய் என்ற ஜப்பானிய சொல்லுக்கு பியூச்சர் அதாவது எதிர்காலம் என்று பொருள். ரூ.22 லட்சம் கோடி இந்தியாவின் புதைபடிம எரிபொருள் இறக்குமதி ரூ.22 லட்சம் கோடியாக உள்ளது.
இதனால், ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் ஏராளம். அதன் எதிர்விளைவுகளைத்தான் நாம் இப்போது கடுமையாக அனுபவித்து வருகிறோம். டெல்லியில் தினமும் நானும் இதே பிரச்சினையைத் தான் சந்திக்கிறேன்.
எனவே இந்தியா மாற்று எரிபொருளுக்கு வேகமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது இந்தியா எரிபொருளைப் பொருத்தவரையில் நிகர ஏற்றுமதியாளராக உருவெடுக்கும். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.