சிஎஸ்ஐஆர் சார்பில் சென்னையில் 2 நாள் தொழில்முனைவு மாநாடு!

பிப்.14-ல் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கிறார்
சிஎஸ்ஐஆர் சார்பில் சென்னையில் 2 நாள் தொழில்முனைவு மாநாடு!
Updated on
2 min read

சென்னை: சென்னையில் சிஎஸ்ஐஆர் சார்பில் நடத்தப்படும் ஆராய்ச்சி, தொழில்முனைவு தொடர்பான இரண்டு நாள் மாநாட்டை வரும் 14-ம் தேதி மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று (பிப். 12) நடைபெற்றது. இதில், சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி (CSIR-SERC) இயக்குநர் என்.ஆனந்தவல்லி, சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ (CSIR-CLRI) இயக்குநர் என்.தணிகைவேலன், சிஎஸ்ஐஆர்-சிஇசிஆர்ஐ (CSIR-CECRI) இயக்குநர் கே.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு இந்த மாநாட்டின் முக்கியத்துவம குறித்து எடுத்துரைத்தனர்.

அவர்கள் கூறியது: “இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலான சிஎஸ்ஐஆர் (CSIR), அதன் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில், ஆராய்ச்சி-தொழில்-புத்தொழில் மற்றும் தொழில்முனைவு (Research-Industry- Start up and Entrepreneurship - RISE- 2026) என்ற மாநாட்டை 14.02.2026 அன்று சென்னையில் நடத்துகிறது. தொடக்க அமர்வில் கல்வி நிறுவனங்களுடன், சிஎஸ்ஐஆர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளும்.

புத்தொழில் நிறுவனங்களுக்கான தொழில் பாதுகாப்பகங்களை எளிதாக்குவதில் முன்னணியில் இருக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒரு கட்டமைக்கப்பட்ட தொடர்பை ஏற்படுத்தும் வகையில், இந்த இரண்டு நாள் (பிப்ரவரி 14, 15) மாநாடு இருக்கும்.

இந்த மாநாட்டை, சென்னை வர்த்தக மையத்தில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கவுள்ளார். இது கொள்கை வகுப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் துறையினர், புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பை எளிதாக்கும்.

பசுமை எரிசக்தி, சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, நகர்ப்புற திட்டமிடல், மேம்பட்ட பொருட்கள் வடிவமைப்பு, அடுத்த தலைமுறை தோல் பொருட்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறும். பண்ணையிலிருந்து எதிர்காலம் வரை, சிறந்த எதிர்காலத்திற்கான வளங்கள், வாழ்க்கை அறிவியல், மருத்துவ கண்டுபிடிப்பு ஆகியவையும் மாநாட்டின் முக்கிய கருப்பொருள்களாக இருக்கும்.

ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர், கல்வித்துறையினர், இளம் தொழில்முனைவோர் ஆகியோரிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை வளர்க்க, தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஒத்துழைப்பை வலுப்படுத்த, மாநாட்டின் போது சிஎஸ்ஐஆர்-ருக்கும் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் பாதுகாப்பு மையங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.

100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், முக்கியமாக புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஆகியவை தங்கள் தயாரிப்புகளை மாநாட்டில் காட்சிப்படுத்துவார்கள். தொழில்நுட்ப வழிகாட்டியாக சிஎஸ்ஐஆர் செயல்படும். இதன் மூலம் சந்தையில் புதுமைகள் அதிகரிக்கும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டின் இறுதி நாளில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார்.

புத்தொழில் நிறுவனத்தினர், தொழில்துறை பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மாணவர் சமூகத்தினர் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட முதன்மை முயற்சிகளுக்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

சிஎஸ்ஐஆர் சார்பில் சென்னையில் 2 நாள் தொழில்முனைவு மாநாடு!
பிரான்ஸிடம் ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in