

புதுடெல்லி: அரிய வகை தனிமங்கள் மூலம் உள்நாட்டில் காந்தங்கள் தயாரிப்பு திட்டத்தை ரூ.7,200 கோடியில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
நாட்டின் மின் வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் அரிய வகை தனிமங்கள் மூலம் தயாரிக்கப்படும் காந்தங்கள் அத்தியாவசியப் பொருட்களாக உள்ளன. இவற்றை இந்தியா தற்போது சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இதன் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
எனவே, இவற்றை உள்நாட்டில் தயாரிக்க ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கை நாட்டின் தற்சார்ப்பை வலுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: அரியவகை தனிமங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் காந்தங்களை இந்தியா தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
இதனால் ரூ.7,200 கோடி மதிப்பில் உள்நாட்டிலேயே அரிய வகை தனிமங்கள் மூலம் காந்தங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான முடிவு. இதன் மூலம் அரிய வகை தனிமங்கள் உலோகங்களாகவும், உலோக கலவைகளாகவும் மாற்றப்பட்டு காந்தங்கள் தயாரிக்கப்படும்.
ஆண்டுக்கு 1,200 மெட்ரிக் டன் காந்தம் தயாரிக்கும் வகையில் 5 தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்துக்கான உற்பத்தி மையங்கள் அமைக்க 2 ஆண்டுகள் ஆகும். இத்திட்டம் நிறைவு பெறுவதற்கான கால அளவு 7 ஆண்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.