

புதுடெல்லி: முஸ்லிம் பெண்களை பாதிக்கும் பல தார மணத்தை தடை செய்ய வேண்டும் என்று பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் வலியுறுத்தியுள்ளது.
குஜராத்தில் பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் (பிஎம்எம்ஏ) என்ற அமைப்பு செயல்படுகிறது. இது முஸ்லிம் பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறது.
இதன் சார்பில் 2,508 முஸ்லிம் பெண்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தொடர்பான ஆய்வறிக்கையை பிஎம்எம்ஏ வெளியிட்டுள்ளது. இதில், "கணக்கெடுப்பில் இடம்பெற்ற பெண்களின் கணவர்களில் 87% பேர் 2 மனைவிகளை கொண்டிருந்தனர். 10% பேர் மூன்று மனைவிகளை கொண்டிருந்தனர். 3% பேர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகளை கொண்டிருந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
மத சார்பற்ற ஜனநாயகத்துக்கான இந்திய முஸ்லிம்கள் (ஐஎம்எஸ்டி) அமைப்பின் மூத்த செயற்பாட்டாளர்கள் ஜாவேத் ஆனந்த், ஃபெரோஸ் மிதிபோர்வாலா ஆகியோரும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.
இது தொடர்பாக பிஎம்எம்ஏ இணை நிறுவனர்கள் ஜக்கியா சோமன், நூர்ஜஹான் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம் குடும்பச் சட்டத்தில் உடனடி சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கணக்கெடுப்பு முடிவுகள், இந்திய முஸ்லிம்கள் இடையே பல தார மணத்தை தடை செய்வதற்கான அவசரத் தேவையை காட்டுகிறது. இந்த நடைமுறையால் முஸ்லிம் பெண்களின் உடல்நலம், உறவுகள், கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.
பல தார திருமணங்களில் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகள் 31 முதல் 50 வயது வரையிலானவர்கள். 59% பேர் இடைநிலை பள்ளிக் கல்வி மட்டுமே பெற்றவர்களாக உள்ளனர். இத்துடன் அவர்களுக்கு கடுமையான நிதிப் பாதுகாப்பின்மை உள்ளது.
முதல் மனைவிகளில் 65% பேர் மாதம் ரூ.5 ஆயிரத்துக்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். மற்றவர்களுக்கு வருமானம் இல்லை. மேலும் இரண்டாவது மனைவிகளின் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாக உள்ளன.
திருமணமானதில் இருந்து முதல் மனைவிகள் பரிதாப நிலையில் இருப்பது தெரியவருகிறது. அவர்களில் 84% பேருக்கு வருமானம் இல்லை. முதல் மனைவிகளில் 32% பேரிடம் வரதட்சணை கேட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.50,000 முதல் ரூ.20 லட்சம் வரை உள்ளது. இரண்டாவது மனைவிகளிடம் வரதட்சணை மிகவும் குறைவாகவே கேட்கப்பட்டுள்ளது.
பல தார மணம் என்பது முஸ்லிம் சமூகத்தின் சன்னி பிரிவினரில் 20 சதவீதத்தை பாதிக்கிறது, இந்த சன்னி முஸ்லிம்கள், இந்தியாவின் மொத்த இஸ்லாமியர்களில் 88 சதவீதமாக உள்ளனர். எனவே பல தார மணத்தை தடை செய்து மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.