

வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று முதலில் அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பின்னர் அந்த வரி விதிப்பை 15% ஆக உயர்த்தியுள்ளார். இதன் தாக்கம் குறித்து பார்ப்போம்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரலில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய வரி விகிதங்களை அறிவித்தார். இதை எதிர்த்து அமெரிக்காவின் 12 குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தும் 12 மாகாண அரசுகள் சார்பில் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்துப் பெடரல் சர்க்யூட் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்தது. அங்கும் ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்பு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்தது.
தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி உட்பட 6 நீதிபதிகள், ட்ரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்றும், 3 நீதிபதிகள் வரி விதிப்பு செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் புதிய வரி விதிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதலில் 10%... அடுத்து 15%
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 3 மணி நேரத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த அதிருப்தி அளிக்கிறது. சில வெளிநாட்டு சக்திகளின் சதியால் உச்ச நீதிமன்றம் எதிர்மறையாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சில நீதிபதிகள் முட்டாள்கள்போல செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேசப்பற்று இல்லை.
நான் விதித்த பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். முதல்கட்டமாக, அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே வசூலித்த வரியை திருப்பி வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, அமெரிக்க அரசு ஏற்கெனவே வசூலித்த வரிப் பணத்தை எந்த நிறுவனத்துக்கும் திரும்ப வழங்காது” என்றார் அதிபர் ட்ரம்ப்.
அதன்பின்னர் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட திடீர் அறிவிப்பில், “பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன். அடுத்த சில மாதங்களில், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரிகளைத் தீர்மானித்து வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.
தாக்கம் என்ன?
அமெரிக்காவின் இந்தப் புதிய வரிக் கொள்கை குறிப்பிட்ட நாடுகளை மட்டும் இலக்கு வைக்காமல், ஒட்டுமொத்த இறக்குமதியையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இந்த மாற்றத்தால் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் இந்தப் புதிய வரிக் கொள்கை அமலுக்கு வரும்போது, கார் மற்றும் மின்னணுப் பொருட்களின் விலை உலக அளவில் உயரக்கூடும். இது ஒருபுறம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று ட்ரம்ப் கூறினாலும், நுகர்வோர் மீதான விலைவாசி உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்படக்கூடிய நிலைத்தன்மை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரும் வாரங்களில் இது தொடர்பாகப் பிற நாடுகள் எடுக்கப்போகும் எதிர் நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவுக்கு எவ்வளவு வரி?
அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்புக்கு முன்பாக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 10 சதவீத வரியை விதித்திருந்தது. எனினும், அமெரிக்காவுக்கு மிகவும் விருப்பமான நாடு என்ற அந்தஸ்து காரணமாக இந்தியப் பொருட்களுக்கு 3.5 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக, இந்த மாத தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் தொலைபேசியில் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியப் பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும்” என்று அறிவித்தார். இது தொடர்பாக இரு நாடுகளிடையே மார்ச் மாதம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவின் பழைய வரி விதிப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, இந்தியப் பொருட்களுக்கு 3.5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும். எனினும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது அறிவித்த 15 சதவீத வரி விதிப்பு பிப்.24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பழைய 3.5 சதவீத வரி, புதிய 15 சதவீத வரி என இந்தியப் பொருட்களுக்கு 18.5 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வரி உயர்வின் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், மருந்துகள் மற்றும் ஆடைத் தொழில்கள் கூடுதல் சுமையைச் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
‘150 நாட்கள் மட்டுமே’
அமெரிக்க அரசியலமைப்பு சட்டப் பிரிவு 122, கடந்த 1977-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் (ஐஇஇபிஏ) என்றழைக்கப்படும் இந்த சட்டத்தில், அமெரிக்க அதிபருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்படி அமெரிக்க அதிபரால் வெளிநாட்டு சொத்துகளை முடக்க முடியும். டாலர், வங்கி பணப் பரிமாற்றங்களை கட்டுப்படுத்த முடியும். இறக்குமதி, ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியும். பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்.
இந்த ஐஇஇபிஏ சட்டத்தின்படியே புதிய வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். தற்போது இதே சட்டத்தின்படியே அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 15 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். ஆனால், ஐஇஇபிஏ சட்டத்தின்படி வெளியிடப்படும் உத்தரவுகள் தற்காலிகமாக 150 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றால் மட்டுமே இந்த 15 சதவீத வரியை நீட்டிக்க முடியும். இல்லையெனில் ட்ரம்ப் உத்தரவு காலாவதியாகி விடும் என்று அமெரிக்க சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.