புதுடெல்லி: டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மே 20 முதல் அமலுக்கு வரும் வகையில் சரக்குக் கட்டணங்களை உயர்த்த போக்குவரத்துத் துறை சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையால் விலைவாசி மேலும் உயரும் என நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சரக்கு கட்டண உயர்வு அகில இந்திய போக்குவரத்துத் துறையினர் நலச் சங்கம் (AITWA) சார்பில் வியாழக்கிழமையன்று (மே 21) அறிவிக்கப்பட்டன.
‘இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டீசல் விலை நிலையாகவே இருந்து வந்தன. இதனால் சரக்குக் கட்டணங்களை பெரிய அளவில் உயர்த்தவில்லை. தற்போது அமலுக்கு வந்த டீசல் விலையின் கடும் உயர்வு காரணமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது’ என அந்த சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வைச் சமாளிக்கும் வகையில், போக்குவரத்துத் துறையினர் 'எரிபொருள் சரிசெய்தல் காரணி' (FAF) எனப்படும் ஒரு புதிய கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
போக்குவரத்து துறையின் செலவுகளில் 65% பங்கினை டீசலின் விலை நிர்ணயிக்கிறது. எனவே டீசல் விலைக்கான செலவை ஈடுகட்டும் வகையில், சரக்கு கட்டணங்களை உயர்த்த இந்த கணக்கீட்டு முறை உதவும் என போக்குவரத்து துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், போக்குவரத்துத் துறையினர் தங்கள் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு உதவும் வகையில், இந்த புதிய வழிமுறையை ஏற்றுக்கொண்டு கூடுதல் கட்டணத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அகில இந்திய போக்குவரத்துத் துறையினர் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோல, பல இடங்களில் டீசல் பற்றாக்குறையால் லாரிகள் ஆங்காங்கே சிக்கிக்கொள்வதால், சரக்குகள் வந்து சேர்வதில் ஏற்படும் தாமதத்துக்கு எவ்வித அபராதமும் விதிக்க வேண்டாம் என்றும் போக்குவரத்து துறையினர் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
சரக்கு கட்டணம் 4% உயர்த்தப்படுவதால், நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சரக்கு கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.