

சென்னை: 'யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் விதிக்கும் முடிவை திரும்ப பெறாவிட்டால், பண்டிகைக் காலம் முடிந்த பின் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காய்கறிக்கடை, தேநீர்க்கடை முதல் மளிகைக் கடை வரை இன்று அனைத்துத் தரப்பு மக்களும் யுபிஐ மூலமாகவே மிக எளிமையாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வந்த நிலையில், தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வரி அல்லது சேவைக் கட்டணம் விதிப்பது அப்பட்டமான மக்கள் விரோதச் செயலாகும்.
யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கான வரி மற்றும் கூடுதல் கட்டண நடைமுறைகளை மத்திய அரசு தீபாவளி பண்டிகை வரை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இது தற்காலிகமான ஒரு கண் துடைப்பே தவிர, பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் எவ்வித நிரந்தரத் தீர்வும் அளிக்காது. பொதுமக்களையும் வணிகர்களையும் தண்டிக்கும் இந்த விபரீதத் திட்டத்தை முழுமையாக நீக்கும் வரை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை ஓயாது.
தற்போது நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள சூழலில், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி பண்டிகைக் காலக் கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டும். சிறு வணிகர்களின் பண்டிகைக் கால வியாபாரம் தடைபடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பேரவை தனது போராட்டங்களை தற்போது தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
பண்டிகைக் காலங்கள் நிறைவடைந்தவுடன், யுபிஐ வரி விதிப்பு திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், இப்பேரவை சார்பில் பொதுமக்கள் மற்றும் அனைத்து வணிக அமைப்புகளை ஒன்றிணைத்து தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் தொடர் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.