

புதுடெல்லி: ஐரோப்பிய கூட்டமைப்புடன் இந்தியா மேற்கொள்ளப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் பால், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு வரிச் சலுகை அளிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய கூட்டமைப்புடனான இந்தியா மேற்கொண்டுள்ள இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் சென்சிட்டிவ் துறைகளாகக் கருதப்படும் பால்பொருட்கள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தேயிலை, காபி ஆகியவற்றுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்களுக்கான இறக்குமதி வரியில் எவ்விதக் குறைப்பும் செய்யப்படவில்லை. இவற்றுடன் மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், கடல் உணவுகள், பாலாடைக்கட்டி, சோளம், பழங்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய், வாசனைப் பொருட்கள், புகையிலை ஆகிய துறைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா இதுவரை மேற்கொண்ட எந்தவொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் பால் உற்பத்தித் துறைக்கு வரிச் சலுகைகளை வழங்கியதில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.