

தென்காசி: தென்காசி மாவட்டம் விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டது. மானாவாரி நிலங்கள், குளம், கால்வாய் பாசன நிலங்கள், மலைப் பகுதிகளில் பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சுரண்டை, ஆய்க்குடி, கம்பளி, அனந்தபுரம், அகரக்கட்டு, கீழப்பாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தக்காளி விலைபடிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி 6 முதல் 7 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘தக்காளிக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படாது. ஆனால், மற்ற பயிர்களைப்போல் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கும்.
விதை, உழவு, பாத்தி கட்டுதல், உரம், பூச்சிமருந்து, ஆள் கூலி என அதிக செலவு ஏற்படும். ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு மேல் விற்பனையானால் நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம்.
தற்போது தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் ஆள் கூலி, வாடகைக்கே போதுமானதாக இருக்கும். விலை வீழ்ச்சியால் பயிர்களுக்கு பூச்சிமருந்து, உரம் வாங்க முடியவில்லை. எனவே, ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிர்களை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். தென்காசி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களை கொண்டுவர வேண்டும்.
தக்காளி சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை, சென்ட் தொழிற்சாலை, எலுமிச்சை, தேங்காய் போன்றவற்றைக் கொண்டு மதிப்புகூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில்கள் அதிகரித்தால் விவசாயம் பாதுகாக்கப்படும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.