

சென்னை: தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் சுங்கக் கட்டணம் கட்டணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் உள்ளிட்டவை பயணித்து வருகின்றன. இச்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணத்தை வசூலிக்க, 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
இவற்றில் சென்னை - கன்னியாகுமரி, திருச்சி - சேலம், சேலம் - கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் முக்கியமானவையாகும். சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏப்.1-ம் தேதி முதல் இந்த 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
இதில், 60 கி.மீ தொலைவில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச்சாலையில் 4 சுங்கச்சாவடிகள், மதுரை வெளிவட்டச்சாலையில் 2 சுங்கச்சாவடிகள், கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை, மாமல்லபுரத்தில் உள்ள நாவலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளும் அடங்கும்.
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் ஆண்டு அட்டவணைப்படி செப்.1-ல் கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்படும்.
போக்குவரத்து அல்லாத வாகனங்கள் 200 முறை பயணம் செய்ய அனுமதிக்கும் வகையில், ரூ.3 ஆயிரம் விலையிலான வருடாந்திர சுங்க அனுமதிச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் சுங்க வசூல் சீரான நிலையை அடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் போர் சூழலால் ஏற்கெனவே, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஆட்டோ காஸ் தட்டுப்பாடு, பிரீமியம், பவர், ஸ்பீடு பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள், ஓட்டல் உணவுகளின் விலை உயர்ந்துள்ளது. தற்போது சுங்கச்சாவடி கட்டணமும் உயரவுள்ளதால், சரக்கு வாகனங்களின் கட்டணம் அதிகரிப்பதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்க வருவாய் அதிகரிப்பு: தமிழகத்தில் சுங்கச்சாவடி வாயிலாக 2022-23-ம் நிதியாண்டில் ரூ.3,758.23 கோடியாக வருவாய் இருந்தது. இது, 2023-24-ல் ரூ.4,157.96 கோடியாகவும், 2024-25-ல் ரூ.4,300 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2025-26-ம் ஆண்டில் பிப்.28 வரை, ரூ.4,000 கோடியாக உள்ளது.