

புது டெல்லி: கடந்த 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரையிலான 11 மாதத்தில், இந்தியா 7.79 லட்சம் டன் புண்ணாக்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 7,71,435 டன் கடுகுப் புண்ணாக்கு, 7,581 டன் ஆமணக்குப் புண்ணாக்கு ஆகும்.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வெறும் 38,240 டன்களாக மட்டுமே இருந்த புண்ணாக்கு ஏற்றுமதி இந்த ஆண்டு 20 மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் (எஸ்இஏ) நிர்வாக இயக்குநர் பி.வி.மேத்தா கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் புண்ணாக்கு விலை குறைவாக இருந்ததால் சீனா அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளது.
குறிப்பாக, ஒரு டன் இந்தியக் கடுகுப் புண்ணாக்கு சுமார் 225 அமெரிக்க டாலர் விலையில் கிடைக்கிறது. இது ஐரோப்பிய சந்தை விலையான 297 டாலரை விடக் குறைவு ஆகும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதி 11 சதவீதம் சரிந்து 34,93,823 டன்களாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் இது 39,33,349 டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.