திருச்சி மின் வட்டத்தில் சூரிய மின்சக்தி பயன்பாடு உயர்வு: இதுவரை 4,000 குடும்பங்கள் பலன்

திருச்சி மின் வட்டத்தில் சூரிய மின்சக்தி பயன்பாடு உயர்வு:  இதுவரை 4,000 குடும்பங்கள் பலன்
Updated on
2 min read

திருச்சி: திருச்சி மின் வட்டத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான சூரிய மின்சக்தி (சோலார்) பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் சோலார் பேனல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.

வீட்டுஉபயோக பயன்பாட்டுக்கு சோலார் பேனல் பொருத்த மத்திய அரசு சார்பில் பிரதமர் சூரியசக்தி இலவச வீட்டுபயன்பாட்டு மின்சாரம் திட்டம் வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 கிலோ வாட்டுக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம் மற்றும் 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும் வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்படும். இதில், மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் திட்டம் தொடங்கிய 2024-ம் ஆண்டு முதல் தற்போது வரை திருச்சி வட்டத்தில் உள்ள 7 கோட்டங்களிலும் இணையதளம் வாயிலாக 4,912 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 4,244 வீட்டு உபயோக சோலார் பேனல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 16 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மானியமாக இதுவரை ரூ.28 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழக அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘திருச்சியில் திருச்சி நகர், கிழக்கு, லால்குடி, மணப்பாறை, முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம் என 7 மின்வாரிய கோட்டங்கள் உள்ளன. இதில், மொத்த சோலார் மின்சக்தி உற்பத்தியில் திருச்சி நகர் மற்றும் கிழக்கு கோட்டங்கள் மூலம் 50 சதவீதத்துடன் அதிகப்படியாக சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக ரங்கம் கோட்டத்தில் சோலார் பேனல்கள் பொருத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சோலார் பயன்பாடு இரட்டை வழி மீட்டர் (பை- டைரக்ஷனல்) வாயிலாக கணக்கிடப்படுகிறது. இதன் வாயிலாக சூரியஒளி வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்து வீட்டு உபயோக பயன்பாடுபோக, மீதமுள்ள மின்சாரம் மின்கம்பங்களுக்கு அனுப்பப்படுகிறது.

அதேபோன்று, மின் உற்பத்தி இல்லாத நேரத்தில் மின் கம்பத்தில் இருந்து பெறப்படும் மின்சாரம் கணக்கிடப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலான மின்சாரம் மட்டுமே கட்டணத்துக்கு கணக்கிடப்படுகிறது. தற்போது வரை திருச்சியில் 7 கோட்டங்களிலும் சோலார் பேனல் வாயிலாக சுமார் 20 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது.

சோலார் பேனல் அமைப்பதற்கு ஏற்கெனவே மத்திய அரசு மானியம் வழங்கிவரும் நிலையில், தமிழக அரசும் தற்போது வீட்டுக்கூரை சூரிய மின் மானியத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதனால் 3 கிலோ வாட்டுக்கு மேல் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சோலார் பயன்பாடு வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

திருச்சி மின் வட்டத்தில் சூரிய மின்சக்தி பயன்பாடு உயர்வு:  இதுவரை 4,000 குடும்பங்கள் பலன்
“பரந்தூரில் கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைப்பீர்” - பெ.சண்முகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in