

புதுடெல்லி: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் என்எச்ஏஐ ஒருவிரிவான ஆய்வை மேற்கொண்டது. இதன்படி, 1,750 கி.மீ. தூரத்தை உள்ளடக்கிய 424 பகுதிகளில் செல்போன் நெட்வொர்க் வசதி இல்லை என தெரியவந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்கள் தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்வதால், அந்தப் பகுதிகளில் நம்பகமான செல்போன் நெட்வொர்க் வசதி இல்லாதது நெடுஞ்சாலை செயல்பாடுகள், அவசரகால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது எனவே, இந்த விவகாரத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறையும் (டிஓடி) இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமும் (டிராய்) உடனடியாக தலையிட வேண்டும்.
குறிப்பாக, பசுமை வழிச் சாலைகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் செல்போன் நெட்வொர்க் வசதியை மேம்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதியில் நெட்வொர்க் வசதி சரியாக இல்லை என்பது தொடர்பான விரிவான விவரம், டிஓடி, டிராய் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கால்நடைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் இதர ஆபத்தான இடங்கள் உள்ளிட்ட விபத்து நேரிடக்கூடிய பகுதிகள் குறித்த குறுஞ் செய்தியை பயணிகளுக்கு அனுப்புமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.