

கர்னூல்: ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் ஜோனாகிரி தங்கச் சுரங்க திட்டம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது. நாட்டின் முதல் மிகப் பெரிய தனியார் தங்கச் சுரங்கம் திட்டத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்தியா தற்போது ஆண்டுக்கு 800 டன்னுக்கு மேல் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. கர்நாடகாவின் கோலார் தங்கச் சுரங்கம் கடந்த 2000-ம் ஆண்டு மூடப்பட்ட நிலையில், தற்போது கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்கச் சுரங்கத்தில் மட்டும் ஆண்டுக்கு 1.5 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் ஜோனாகிரி, எர்ராகுடி மற்றும் பகிதிராயி கிராமங்களில் 598 ஹெக்டேர் பரப்பில் புதிய தங்க வயல் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 13.1 டன் முதல் 42.5 டன் அளவுக்கு தங்கம் எடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு ஜியோமிசோர் சர்வீஸஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் ரூ.400 கோடிக்கு மேல் முதலீடு செய்து தங்கச் சுரங்கம் அமைத்து வருகிறது.
இந்த தங்கச் சுரங்கத்தில் அடுத்த மாதம் உற்பத்தி தொடங்கவுள்ளது. இதை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இங்கு ஆண்டுக்கு 1000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தங்கம் இறக்குமதி குறையும்.
ஜோனாகிரி தங்கச் சுரங்கத் திட்டம் வெற்றி பெற்றால், இன்னும் பல முதலீட்டாளர்கள் தங்கச் சுரங்க திட்டத்தில் முதலீடு செய்வர், அடுத்த 10 ஆண்டுகளில் 50 முதல் 100 டன் தங்கம் உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட வேண்டும் என ஜியோமிசோர் நிறுவனத்தின் இயக்குனரும், டெக்கான் கோல்ட் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஹனுமன் பிரசாத் கூறியுள்ளார்.