

மதுராந்தகம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதால், கரும்பு சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில், கடந்த 1961-ம் ஆண்டு ஆயிரம் டன்கள் கரும்புகளுடன் அரவை தொடங்கப்பட்டது. பின்னர், கடந்த 1995-ம் ஆண்டு 2,500 டன்கள் என விரிவாக்கம் செய்யப்பட்டது.
மேலும், சில நிர்வாக காரணங்களால் கடந்த 2009-ம் ஆண்டு வரை ஆலையில் அரவை நிறுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2010-ம் ஆண்டு ரூ.33 கோடி அரசு நிதி உதவியுடன் மீண்டும் கரும்பு அரவை தொடங்கப்பட்டது. மேலும், கடந்த 2021-22-ம் ஆண்டு அரவை பருவத்தில் 1. 92 லட்சம் டன் கரும்பு அரைக்கப்பட்டது.
இதேபோல், கடந்த 2022-23-ம் ஆண்டு அரவை பருவத்தில் 2 லட்சம் மெட்ரிக் டன், 2023-24-ம் ஆண்டு பருவத்தில்1.61 லட்சம் டன், 2024-25-ம் ஆண்டில் 70 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டான 2025-26-ம் ஆண்டுக்கான அரவையில் 3,200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும்.
மேலும், 1 லட்சம் டன் அரவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவது மேற்கண்ட ஆலை நிர்வாகத்தின் தகவல்கள் மூலம் தெரிகிறது.
மேலும், கரும்பு சாகுபடி குறைவுக்கு அரசு வழங்கும் தொகை குறைவு மற்றும் வெட்டுக்கூலி நிர்ணயம் செய்யாததே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர். இதுகுறித்து, விவசாயி கஜேந்திரன் கூறியதாவது: கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,290 மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.349 வழங்கப்படுகிறது. ஆனால், டன் ஒன்றுக்கு சாகுபடி செலவு ரூ.4 ஆயிரம் செலவாகிறது.
கஜேந்திரன்
மேலும், கரும்பு வெட்டுக்கூலியாக டன்னுக்கு ரூ.1,100 முதல் 1,500 வரை வழங்க வேண்டியுள்ளது. அதனால், கரும்பு சாகுபடியை விவசாயிகள் மத்தியில் ஊக்கப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது.
இதில், முதலாவதாக வெட்டுக்கூலியை அரசே நிர்ணயம் செய்து, டன்னுக்கு விதை கரணையாக 3 முதல் 4 டன் கரணைகளை மானியமாக வழங்க வேண்டும். மேலும், டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.