கோவை: ‘வந்தே பாரத் ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு ஏற்றவாறு உணவின் தரம் இல்லை’ என குற்றம்சாட்டியுள்ள ‘சிட்டிசன் வாய்ஸ் கோயமுத்தூர்’ அமைப்பு, உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் சி.எம். ஜெயராமன், செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் ஆகியோர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: வந்தே பாரத் சேவையில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு ஏற்றவாறு உணவின் தரம் இல்லை என பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனவே, உணவு விற்பனையாளர்களின் தர நிர்ணயம், உணவின் தரம் மற்றும் கண்காணிப்பு முறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும். மேலும், கோவையில் இருந்து பொள்ளாச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்திற்கான ரயில் சேவைகளை மீண்டும் தொடர வேண்டும். ராமேஸ்வரத்திற்கு இரவு நேர ரயில் சேவையை புதுப்பிக்க வேண்டும். அதிக அளவு பயணிகள் வந்து செல்லும் போத்தனூர் ரயில்நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.350 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளன.
ஆனால் கட்டுமான பணிகள் சரியாக இல்லாத நிலையில், மேற்கூரைகள் மழைக் காலங்களில் ஒழுகுகின்றன. பயணிகள் நலன் கருதி இவற்றை சீரமைக்க வேண்டும். பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை, மும்பை மற்றும் திருச்சி செல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களுக்கு போத்தனூரை முனையமாக மேம்படுத்த வேண்டும்.
போத்தனூர் ரயில் நிலையத்தில் தட்கல் பயணச்சீட்டு வழங்கும் நேரங்களில் கூடுதலாக கவுண்டர்களைத் திறக்க வேண்டும். மேலும், கோவை, போத்தனூர், வடகோவை ரயில் நிலையங்களில் கடந்த காலங்களில் இருந்த தொடுதிரை தகவல் இயந்திரங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இதன் மூலம் ரயில்கள் இயக்கம் குறித்து பயணிகள் 24 மணி நேரமும் தகவல்களைப் பெற உதவியாக இருக்கும். கோவையில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள், ரயில் இயக்கத்தின்போது அசவுகர்யத்தை உணர்கின்றனர்.
கோட்ட ரயில்வே பாதுகாப்பு மற்றும் இயந்திரவியல் குழுக்கள் மூலம் விரிவான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டு, சஸ்பென்ஷன் மற்றும் பெட்டிகளின் இணைப்பு சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்களைத் தவிர, மற்ற ரயில்களில் குறிப்பாக, நீலகிரி மற்றும் சேரன் எக்ஸ்பிரஸில் கழிவறைகளின் சுகாதாரம் மிக மோசமாக உள்ளது.
கேரளாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் ரயில்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தனியார் துப்புரவுப் பணியாளர்கள், ரயில் கழிவறைகளை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தும், அது முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. தூய்மைப் பணிகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.