

புதுடெல்லி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) சந்திக்கும் பணப்பட்டுவாடா தாமதங்களுக்குத் தீர்வு காண்பதற்கும், தகராறுகளை விரைவாக முடிப்பதற்கும் வழிவகை செய்யும் ‘எம்எஸ்எம்இ வளர்ச்சி (திருத்த) மசோதா 2026’ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
ஏற்கெனவே கடந்த திங்கள்கிழமை மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மக்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை எம்எஸ்எம்இ துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி தாக்கல் செய்தார். சிறு தொழில்களின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சிறு தொழில்களிடம் இருந்து பெறும் அனைத்துக் கொள்முதல்களுக்கான தொகையையும் ‘டிரேட்ஸ்’ இணையதள அமைப்பின் மூலமாகவே கட்டாயம் செலுத்த வேண்டும்.
எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொடர்பான வர்த்தகத் தகராறுகளுக்கான மத்தியஸ்தம் 90 நாட்களுக்குள் முடிவெடுக்கப்பட வேண்டும். தகராறு தொடர்பான மேல்முறையீடு நீதிமன்றங்களில் 6 மாதங்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால், சர்ச்சைக்களுக்குரிய தொகையில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு நீதிமன்றங்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அபராத முறை மாற்றம்
சிறிய அளவிலான பதிவு மற்றும் விவரங்கள் தாக்கல் செய்வதில் ஏற்படும் தவறுகளுக்கு இனி குற்றவியல் நடவடிக்கைகள் இருக்காது. அதற்குப் பதிலாக ரூ.1,000 முதல் ரூ.1,00,000 வரை படிப்படியான நிர்வாக எச்சரிக்கைகள் மற்றும் அபராதங்கள் மட்டுமே விதிக்கப்படும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில்தான் இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.