

புதுடெல்லி: பல துறைகளை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆக்கிரமித்து வரும் சூழ்நிலையில் மென்பொறியாளர்கள் தங்கள் திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக மென்பொருள் உருவாக்கம் (கோடிங்) சார்ந்த பணிகள் பெரிய அளவில் மாறி வருகிறது. இந்தச் சூழலில், துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களின் திறன்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களின் தேவையை அவர்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஏஐ தொழில்நுட்பம் மிக விரைவாக கோடிங் உருவாக்கும் திறனைப் பெற்று வருகிறது. வழக்கமான கோடிங் பணிகளின் தேவை குறைந்து வருகிறது. எனவே, மென்பொருள் பொறியாளர்கள் வெறும் கோடிங் சார்ந்து எழுதுவதோடு நிறுத்திவிடாமல், சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, கட்டமைப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மாறிவரும் தொழில்நுட்ப உலகுக்கு ஏற்பத் தங்களை மேம்படுத்திக் கொள்ளாதவர்கள் துறையில் தொடர்வது அவர்களுக்கு பெரும் சவாலாகவே அமையும். தொழில்நுட்பத்துக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்பவர்களுக்கே எதிர்காலத்தில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.