

ஓசூர் / கிருஷ்ணகிரி: மத்திய பட்ஜெட்டில் கடன் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக சிறு, குறுந் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓசூர் சிறு, குறு தொழிற்சாலைத் தலைவர் எஸ்.மூர்த்தி கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்கள் பாராட்டுக்குரியவை.
மேலும், லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது முக்கியமான அறிவிப்பாகும். இதன் மூலம் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும். அதேபோல, டிடிஎஸ் மற்றும் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான படிவங்களை எளிமைப்படுத்துவதாக அறிவித்திருப்பதும் சிறுதொழில் முனைவோருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏமாற்றங்கள்: கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தொழில் வளர்ச்சிக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை வெறும் ரூ.10,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. மேலும், சிறு தொழில்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட கடன் உதவித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமான ஓசூரின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலான எந்த சிறப்புத் திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.குறிப்பாக, விளைநிலங்களைப் பாதிக்காத வகையிலான விமான நிலையம், ஓசூர்-திருப்பத்தூர் ரயில்வே வழித்தடம், மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை ஆகியவை குறித்த அறிவிப்புகள் வராதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
ஓசூரில் ஆட்டோமொபைல் துறையைத் தாண்டி, ராணுவத் தளவாட உற்பத்தித் தொழில்களை அமைக்க வேண்டும் என்ற எங்களது தொடர் கோரிக்கையும் இந்த பட்ஜெட்டில் மத்திய அரசால் கண்டுகொள்ளப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தேங்காய் உற்பத்தி: கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி கூறும்போது, “தேங்காய் ஊக்கத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துவதாகும்.
இதற்காக, உற்பத்தி குறைந்த பழைய மற்றும் பயனற்ற தேங்காய் மரங்களை அகற்றி, அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய நாற்றுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வகை தென்னங்கன்றுகளை நடவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
தேங்காய் ஊக்கத் திட்டம்: தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, “தேங்காய் ஊக்கத் திட்டம் தென்னை வளர்ச்சிக்கு உதவும். உலக உணவு சந்தை இந்தியாவை நோக்கி இருக்கும் நேரத்தில், உலக வேளாண் சந்தை விலைக்கு இந்திய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.