

சிவகங்கை: மூடிக்கிடக்கும் சிவகங்கை கிராபைட் ஆலையை இயக்கவும், மின்சார வாகன பேட்டரி தயாரிப்புக்கு பயன்படுத்தும் வகையில் 99.99 சதவீத தரத்தில் கிராபைட்டை உற்பத்தி செய்யவும் தமிழ்நாடு அரசு கனிம நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியில் தமிழ்நாடு அரசு கனிம நிறுவனம் (டாமின்) சார்பில் 1994-ம் ஆண்டு முதல் கிராபைட் ஆலை இயங்கி வருகிறது. இங்கு 130 பேர் பணிபுரிகின்றனர். இதுதவிர, ஒப்பந்தத் தொழிலாளர்கள் 30 பேர் பணிபுரிந்தனர்.
இந்த ஆலை மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 28 டன் வீதம் ஆண்டுக்கு 700 டன் கிராபைட் உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில், ஏலம் எடுத்தோர் கொள்முதல் செய்யாததால் ரூ.30 கோடி மதிப்பிலான 3,600 டன் கிராபைட் தேக்கமடைந்தது.
கடந்த 2 மாதங்களாக ஆலை இயங்கவில்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். ஆலை நிரந்தரமாக மூடப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த ஆலையில் 96 சதவீதம் வரை நிலையான கார்பன் இருக்கும் வகையில் கிராபைட் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், அதைவிட அதிக தரத்திலான கிராபைட்டை உற்பத்தி செய்தால், அவற்றை மின் வாகனம் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க பயன்படுத்த முடியும்.
எனவே, பேட்டரி தயாரிப்புக்கு பயன்படுத்தும் வகையில் 99.99 சதவீத நிலையான கார்பன் இருக்கும் வகையில், கிராபைட் தரத்தை உயர்த்த டாமின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கனிமவளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்துள்ளார். பேட்டரிகளுக்கு பயன்படுத்தும் வகையில் கிராபைட் தரத்தை உயர்த்துவதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்
படுகிறது. இதுகுறித்து சிவகங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், கிராபைட் ஆலை புத்துயிர் பெறுவதை வரவேற்கிறோம். அமைச்சர் அறிவித்தபடி, ஆலையை உடனடியாக திறந்து தரமான கிராபைட் தயாரித்தால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.