

சென்னை: பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய மின்கசிவு, மின் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கனமழை, பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் காரணமாக மின் விநியோகக் கட்டமைப்புகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய மின்கசிவு, மின் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, பொதுமக்களும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகப் பணியாளர்களும் கீழ்க்கண்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:
மின்கம்பங்கள் அருகில் செல்லாதீர்கள்:
மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்மானப் பெட்டிகள், மின்கம்பிகள் மற்றும் ஸ்டே கம்பிகளின் அருகில் செல்வதையும், அவற்றின் அருகே தேங்கியுள்ள மழைநீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய ஆபத்துகளைக் கண்டால் மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அறுந்த மின்கம்பிகளைத் தொடாதீர்கள்:
தரையிலோ, சாலையிலோ அல்லது மழைநீரிலோ அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடவோ, அப்புறப்படுத்தவோ கூடாது. பாதுகாப்பான தூரத்தில் இருந்து மற்றவர்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும், அருகில் செல்லவிடாமல் எச்சரித்து, உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது பாதுகாப்பாக இருங்கள்:
திறந்தவெளி, தனித்த மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சமடைய வேண்டும். கட்டிடம் கிடைக்காவிட்டால் தாழ்வான இடத்தில் தஞ்சமடைய வேண்டும். திறந்த ஜன்னல்கள், கிரில்கள் அருகில் நிற்பதையும், இடியின்போது மின்சாதனங்கள் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
ஈரமான கைகளால் மின்சாதனங்களை இயக்காதீர்கள்:
தண்ணீர் கசியும் ஈரமான சுவர்கள், ஈரமான சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களைத் தொடக்கூடாது. மின்கசிவு சந்தேகம் ஏற்பட்டால், பாதுகாப்பாக முடிந்தால் மின்சாரத்தைத் துண்டித்து, தகுதியான பணியாளர்களின் உதவியை நாட வேண்டும். குழந்தைகள் சுவிட்சுகள் மற்றும் மின் உபகரணங்கள் அருகில் விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளை அகற்றாதீர்கள்:
மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளை வெட்டவோ, இழுத்து அகற்றவோ கூடாது. மரக்கிளைகள் வழியாக மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அவற்றை அகற்ற மின்வாரிய அலுவலர்களை மட்டுமே அணுக வேண்டும்.
மின்கம்பங்களைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்:
மின்கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பிகளில் கால்நடைகளைக் கட்டுதல், துணிகளை உலர்த்துதல், விளம்பரப் பலகைகள் அல்லது பந்தல்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மின்கம்பிகளுக்குக் கீழே கால்நடைகளைக் கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
மின்கசிவுத் தடுப்புக் கருவி பொருத்துங்கள்:
வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, தகுதியான மின்சாரப் பணியாளர்களின் உதவியுடன் RCCB (Residual Current Circuit Breaker) பொருத்த வேண்டும். வீட்டின் மின்வயரிங் மற்றும் பாதுகாப்புக் கருவிகளை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். RCCB மட்டும் முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்யாது; முறையான மின்காப்பும் (Insulation)அவசியம்.
மின்னகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்:
மின்தடை, அறுந்த மின்கம்பிகள், மின்கசிவு மற்றும் மின்சாரக் கட்டமைப்புப் பாதிப்புகள் தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிக்கு, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது 'மின்னகம்' மின்நுகர்வோர் சேவை மையத்தின் 94987 94987 என்ற எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்-அப் வாயிலாகவே தொடர்புகொள்ளலாம்.
மின்வாரிய பணியாளர்களுக்கான அறிவுறுத்தல்கள்:
பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல்:
மின்சாரப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் உரிய அனுமதி பெற்று, ஏதேனும் பின்னூட்டம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னர், மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதைச் சரிபார்த்து, தேவையான பாதுகாப்பு நிலஇணைப்பு (Earthing) உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துதல்:
தலைக்கவசம், மின்காப்புக் கையுறைகள், பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்பு இடுப்புப்பட்டை மற்றும் பணிக்குத் தேவையான உபகரணங்களைப் பயன்படுத்தாமல் எந்தப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது.
மழைநீர் தேங்கிய பகுதிகளில் எச்சரிக்கை:
மழைநீர் தேங்கிய பகுதிகளில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், உரிய பாதுகாப்பு ஆய்வுக்குப் பின்னரே பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சேதங்களை உடனடியாகச் சரிசெய்தல்:
அறுந்த மின்கம்பிகள், சாய்ந்த மின்கம்பங்கள், சேதமடைந்த மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதுள்ள இடங்களில் பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளை அமைத்து, பொதுமக்கள் அணுகுவதைத் தடுக்க வேண்டும்.
அத்தியாவசியச் சேவைகளுக்கு முன்னுரிமை:
குடிநீர் விநியோக நிலையங்கள், மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்படும் மின்தடைகளைச் சீர்செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் பணிகளை விரைந்து முடித்து, அத்தியாவசியச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அவசர காலத் தயார்நிலை:
மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள், பழுதுநீக்கும் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான மற்றும் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை:
மின்தடைப் புகார்கள் மற்றும் அவசர அழைப்புகளுக்கு உடனடியாகப் பதிலளித்து, களப் பணியாளர்களை ஒருங்கிணைத்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பணியாளர்களின் உயிர் பாதுகாப்பு:
கனமழை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றின்போது ஆபத்தான பணிகளைத் தவிர்த்து, சூழ்நிலைக்கேற்ப பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பணியாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே பழுதுநீக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்:
மழைக்கால மின்பாதுகாப்பு அனைவரின் பொறுப்பாகும். மின்சாரம் தொடர்பான ஆபத்துகளைக் கண்டால் உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவித்து, மின்வாரியப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதிசெய்ய பொதுமக்களும் மின்வாரியப் பணியாளர்களும் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் கேட்டுக்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.