

மும்பை: ஈரான் போர் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமையும் கடும் வீழ்ச்சி நிலவியது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி, அப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனால் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் முடங்கியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த மாதத்தில் 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் இன்று காலைக்குள் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் நிலையங்கள் முற்றிலும் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு விதித்தார். அமெரிக்கா ஈரான் மின் நிலையங்களை தாக்கினால் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தொழில்நுட்ப மையங்களை தகர்ப்போம். ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூண்டு 23 நாட்களுக்கு மேலாகியும் மத்திய கிழக்கில் நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது. இதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையில் இன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்று வெளியேறினர். போர் தொடங்கியதில் இருந்து அவர்கள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர்.
இந்திய பங்குச் சந்தையின் வர்த்தக குறியீடுகள் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை இன்றும் கடும் சரிவுடனே தொடங்கி தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தன. சென்செக்ஸ் 1836 புள்ளிகள் வரை சரிந்து 72,696 புள்ளியில் நிலைபெற்றது. நிஃப்டி 601 புள்ளிகள் வரை சரிந்து 22,512-ல் நிலைபெற்றது. பங்குச் சந்தையில் இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை காரணமாக நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் சரிவு ஏற்பட்டதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால், இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. இது பணவீக்கத்தை அதிகரிக்கிறது.
இந்திய பங்குச் சந்தை மட்டும் அல்லாது ஆசிய பங்குச்சந்தையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. உலகளவிலான பதற்றம் மேலும் நீடித்தால் உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடையும் என அஞ்சப்படுகிறது.