

மும்பை: இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) பரஸ்பர நிதி கட்டணங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 17, 2025 அன்று நடைபெற்ற செபியின் வாரியக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த திருத்தப்பட்ட கட்டமைப்பு பரஸ்பர நிதிக்கான கட்டண விகிதங்களை 15 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கிறது. பெரும்பாலான சொத்து வகைகளில் 10 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலோட்டமாக பார்த்தால் இந்த கட்டண குறைப்பு விகிதம் சிறியதாக தோன்றினாலும் நீண்ட கால முதலீட்டு திட்டங்களில் அதன் தாக்கம் கணிசமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டமைப்புப்படி, ரூ.500 கோடிக்கும் குறைவான சொத்துகளை நிர்வகிக்கும் ஓப்பன் - எண்டட் ஈக்விட்டி நிதிகள் முன்பு இருந்த 2.25 சதவீதத்திலிருந்து இப்போது அதிகபட்சமாக 2.10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கலாம். இதே சொத்து வரம்பில் உள்ள கடன் நிதிகளுக்கான வரம்பு 1.85 சதவீதமாக குறைக்கப்படும்.