

மும்பை: இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய நாட்டின் பங்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாத தரவுகளின் படி இந்தியாவில் இறக்குமதியான கச்சா எண்ணெயில் சுமார் 48 சதவீதம் ரஷ்யாவின் பங்கு உள்ளதாக தகவல்.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்க அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
ரஷ்யாவின் ஆற்றல் வளங்களை அதிகம் வாங்கும் முதல் 5 நாடுகளை இலக்காகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கும், ரஷ்யாவுக்கான நிதி ஆதாரங்களை முடக்குவதற்கும், இந்த நாடுகளின் ஏற்றுமதி பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இம்மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.
அந்த வகையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும்போது அந்தப் பொருட்களுக்கு 100 சதவீத வரிவிதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 18.2 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் ரஷ்யாவில் இருந்து மற்றும் 8.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இந்தியா பெற்றுள்ளது. அந்த வகையில் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 48 சதவீதமாக உள்ளது.
மேற்காசிய போர் காரணமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்ததாக தகவல்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளதாக தகவல். ஒரு பக்கம் அமெரிக்காவின் 100 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை, மறுபக்கம் மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் நிலவும் சவால் உள்ளிட்டவற்றை இந்தியா எப்படி சமாளிக்க உள்ளது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.