

பாஜக எம்.பி ஜனார்த்தன் மிஸ்ரா
புதுடெல்லி: பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் மத்திய அரசின் இ20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் ‘இ20 பெட்ரோல்’ பாதுகாப்பானது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பாஜக எம்.பி ஜனார்த்தன் மிஸ்ரா, இ20 பெட்ரோலுக்கு எதிரான வாதங்களை முன்வைத்து வருபவர்களை நோக்கி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
இ20 பெட்ரோல் குறித்து அவர் கூறியதாவது: தேசத்தின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பாலான சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே நாம் பெற்று வருகிறோம். தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெயை சரக்கு கப்பலில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சமயங்களில் பாதுகாப்பான சரக்கு கப்பல் போக்குவரத்துக்காக 18,000 கிலோமீட்டர் கூடுதலாக பயணிக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
இந்த மாதிரியான சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெட்ரோல் உடன் 20 சதவீத எத்தனாலை கலக்கும் கொள்கை முடிவை முன்னெடுத்தது. இதை சிலர் விமர்சிக்கின்றனர், எதிர்க்கின்றனர்.
‘இ20 பெட்ரோல் வேண்டாம்’, ‘தூய பெட்ரோல் வேண்டும்’ என சிலர் இணைந்து அதற்கு எதிரான இயக்கம் எல்லாம் தொடங்கி உள்ளனர். வாகனங்களுக்கு சுத்தமான பெட்ரோல் தான் சரிவரும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
தேசத்தில் தூய பெட்ரோல் எங்காவது கிடைக்கிறதா? அப்படி இருக்கும் நிலையில் தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டில் இருந்தா வரும்?
பிரேசில் எத்தனால் எரிபொருளை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது. மேலும், எத்தனால் கலந்த பெட்ரோலை வாகனங்களில் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏதும் இல்லை என்று நம் நாட்டின் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், இ20 பெட்ரோல் கொள்கையை எதிர்ப்பது தேவையற்றது என்று அவர் தெரிவித்தார்.
இ20 பெட்ரோல்
பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக அதைப் பயன்படுத்துவதே இ20 பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது.
மாசு குறைவு, எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும், அதோடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் வலுவடையும் என தகவல்.
பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை கடந்த 2022 நவம்பரில் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை வரும் 2030-ல் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இ20 பெட்ரோல் விற்பனை இந்தியாவில் தொடங்கியது.