

மும்பை: ரெப்போ வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் உத்திகளை தீர்மானிக்க நிதி கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும். பணவீக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை இதுவரை இல்லாத வகையில் குறைந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் கடந்த 3-ம் தேதி முதல் நடைபெற்றது.
இந்த 3 நாள் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து ரெப்போ வட்டி வீதத்தை 5.5 சதவீதத்திலிருந்து 5.25 சதவீதமாக குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா நேற்று அறிவித்தார்.
ரெப்போ வட்டி வீதம் என்பது, ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைகளுக்கான வட்டி விகிதமாகும். இந்த வட்டி குறைப்பின் பலனை இதர வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பெறும் கடன்களுக்கும் அளிக்கும். குறிப்பாக வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி குறையும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, வளர்ச்சியை அதிகரித்து பொருளாதார நிலைத்தன்மையை பராமரிப்பதற்காக ரெப்போ வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கிறது. ரெப்போ வட்டி வீதம் குறைந்தால், வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டியையும் வங்கிகள் குறைக்கும்.