

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பூனம் குப்தா
புதுடெல்லி: வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், தாய்நாட்டுக்கு அனுப்பும் பணம் இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் பங்களிப்பு 38 சதவீதமாக உள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் அனுப்பும் பணம் கணிசமாக குறையும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பூனம் குப்தா கூறியதாவது: கடந்த மார்ச் மாதத்தில் வளைகுடா இந்தியர்கள் அனுப்பிய பணம் வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.
மேற்கு ஆசியாவில் (வளைகுடா நாடுகள் உட்பட) தகவல் தொழில்நுட்பம், சேவை, சுகாதாரம், கல்வி, கட்டுமானம் என பல்வேறு துறைகளில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டால்கூட மற்ற துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் தொடர்ந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்பி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
கரோனா பெருந்தொற்று காலத்தையே வெற்றிகரமாக கடந்து வந்துவிட்டோம். ஈரான் போரால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும். இவ்வாறு பூனம் குப்தா தெரிவித்துள்ளார்.