

சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ரூ.1,07, 600-க்கு விற்கப்பட்டது.
கடந்த டிச.27-ல் பவுன் தங்கம் ரூ.1,04,800 ஆக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. பின்னர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஜன.13-ல் ரூ.1,05,360-ஆகவும், ஜன.14-ல் ரூ.1,06,240 ஆகவும் உயர்ந்து, வரலாறு காணாதஉச்சத்தை பதிவு செய்தது.
இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ரூ.1,07,600-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.170 உயர்ந்து ரூ.13,450 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் ரூ.1,17,384-க்கு விற்கப்பட்டது.
இதுபோல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி கிராம் ரூ.8 உயர்ந்து, ரூ.318 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து, ரூ.3,18,000 ஆயிரமாக இருந்தது.
விலை உயர்வு குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை, கிரீன்லாந்து பிரச்சினை, அமெரிக்கா,சீனா ஆகிய நாடுகள் தங்கத்தில் மீது அதிக முதலீடு செய்வது போன்ற காரணங்களால், தங்கத்தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்துள்ளது. இதுபோலவே வெள்ளியும் தொழில்துறை பயன்பாட்டுக்கு அதிகளவில் வாங்கப்படுவதால், விலை உயர்கிறது. வரும் நாட்களில், விலை மேலும் உயரும் என்றார்.