உலகில் முதல் முறையாக பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் இன்ஜின்: சென்னை ஐஐடியுடன் இணைந்து ராணுவம் சாதனை
புதுடெல்லி: உலகில் முதல் முறையாக ரேம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட 155 எம்எம் பீரங்கி குண்டுகளை இந்திய ராணுவம் பயன்படுத்தவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடியும், ராணுவ தொழில்நுட்ப வாரியமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
உலகம் முழுவதும் ஏவுகணைகளில் ரேம்ஜெட் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது காற்றை உறிஞ்சி இயற்கையான அழுத்தத்தை ஏற்படுத்தி இயங்கும். இந்த தொழில்நுட்பத்தை பீரங்கி குண்டுகளில் இந்தியா பயன்படுத்தவுள்ளது, புரட்சிகரமான நடவடிக்கை. சென்னை ஐஐடியின் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் பி.ஏ.ராமகிருஷ்ணா மற்றும் எஸ். வர்மா ஆகியோர் நீண்டகால ஆராய்ச்சிக்குப்பின் பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் பொருத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் மூலம் பீரங்கி குண்டுகள் நீண்ட தூரம் சென்றும் தாக்கும்.
இது குறித்து பேராசிரியர் ராமகிருஷ்ணா கூறுகையில், ‘‘ ரேம்ஜெட் இன்ஜின் காற்றை உறிஞ்சி இயங்குவதால், இதற்கு டர்பைன்கள் அல்லது கம்ப்ரஸ்சர்கள் தேவை இல்லை. பீரங்கி மூலம் இந்த வகை குண்டுகளை மேக் 2 வேகத்தில் தாக்க முடியும். இது திட எரிபொருள் ராக்கெட் குண்டுகளை விட அதிவேகத்தில் செல்லும்’’ என்றார்.
சாதாரண பீரங்கி குண்டுகளைவிட, ரேம்ஜெட் பொருத்தப்பட்ட குண்டுகள், 30 சதவீதம் முதல் 50 சதவீதம் அதிக தூரம் சென்று தாக்கும். ரேம்ஜெட் தொழில்நுட்பத்தை பீரங்கி குண்டுகளில் இணைத்ததன் மூலம், தொலைதூர இலக்குகளை ராணுவம் துல்லியமாக தாக்க முடியும்.
இந்திய ராணுவத்திடம் தற்போது உள்ள 155 எம்எம் பீரங்கி குண்டுகளில், புதிய தொழில்நுட்பத்தை இணைத்து புதுப்பிக்க முடியும். ரேம்ஜெட் பீரங்கி குண்டுகள் தயாரானவுடன், இவற்றை ராணுவத்திடம் உள்ள அனைத்து பீரங்கிகளிலும் பயன்படுத்தலாம்.
