

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தபட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த இறக்குமதிச் செலவினங்களைச் சமாளிக்கும் பொருட்டு, உள்நாட்டிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் பெட்ரோல் 87 காசுகள் உயர்ந்து 105.36 ரூபாய்க்கும், டீசல் 91 காசுகள் உயர்ந்து 97.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் பெட்ரோல் விலை முறையே 110 ரூபாய் மற்றும் 108 ரூபாயை கடந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக விலையை உயர்த்தாமல், படிப்படியாக அதிகரித்து வருகின்றன. எனினும், இந்தத் தொடர் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.