

படம்: நா.தங்கரத்தினம்
ஒட்டன்சத்திரம் பகுதியில் பூச்சிகள், பறவைகளிடம் இருந்து கொய்யா பழங்களை மட்கும் தன்மை கொண்ட 'பயோ பிளாஸ்டிக்' பைகள் மூலம் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
பழநி, ஆயக்குடி, சட்டப் பாறை, அமரப்பூண்டி, கோம்பைப்பட்டி, கணக்கன் பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. கொய்யா பழங்களை பூச்சிகள், புழுக்கள் அதிகளவில் தாக்குகின்றன. இது தவிர, அணில்கள், பறவைகளும் அறுவடைக்கு தயாரான கொய்யா பழங்களை தங்களுக்கு உணவாக்கி கொள்கின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது.
இதை தவிர்க்க,நன்கு விளைந்த கொய்யா பழங்களை பூச்சிகள், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயி கள் புதிய யுக்தியை கையாள்கின்றனர். ஒவ்வொரு மரத்திலும் காய்த்துள்ள கொய்யா பழங்களை மட்கும் தன்மை கொண்ட 'பயோ பிளாஸ்டிக்' பைகளை கொண்டு மூடி விடுகின்றனர்.
இதன் மூலம் கொய்யா பழங்கள் பூச்சிகள், அணில்கள், பறவைகளிடம் இருந்து பாதுகாக்கப்படுகிறது. அறுவடையின் போது கொய்யா மீது உள்ள பைகளை அகற்றி விடுகின்றனர். இந்த யுக்தி நல்ல பலன் கொடுப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்திரப்பட்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது கொய்யாவை பழ ஈ போன்ற பூச்சிகளும், அணில்களும், பறவைகளும் சேதப்படுத்துகின்றன. இதனால் மகசூல் பாதிக்கிறது. இதை தடுக்க, நிலத்தை பாதிக்காத மட்கும் தன்மை கொண்ட 'பயோ பிளாஸ்டிக்' பைகளை பயன்படுத்துகிறோம். ஒரு பை ரூ.2 முதல் ரூ.3 வரை விற்பனை செய்யப்படுகிறது. பைகளால் கொய்யா பழங்களை மூடிவிடுவதால் பூச்சிகள், பறவைகள் தாக்குதல் குறைகிறது.
அறுவடையின்போதும் நன்கு தரமான கொய்யா பழமும் கிடைக்கிறது. அதிக மகசூல் கிடைக்கிறது. இந்த பைகளை பாதுகாப்பாக உபயோகித்தால் மீண்டும் பயன்படுத்தலாம் என்றனர்.