திண்டுக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி

திண்டுக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு 60 டன் வரை வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 25 டன் வரை மட்டுமே அனுப்பப்படுகிறது.

திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பனைக்கென தனியாக பெரிய அளவிலான மொத்த விற்பனை மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் இயங்குகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சின்ன வெங்காயம் இங்கு கொண்டு வரப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு வியாபாரிகள் பலர் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் திண்டுக்கல் லில் இருந்து வெங் காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மார்க்கெட் செயல்படும் நாட்களில் நாள் ஒன்றுக்கு சிறிய வெங்காயம் 250 டன் வரை சின்ன வெங்காயம் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. பெரிய வெங்காயம் 600 டன் வரை கொண்டு வரப்படுகிறது.

தற்போது மொத்த விலையில் புதிய சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.45 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெங்காய வரத்து சீராக உள்ளதால் விலை ஏற்ற இறக்கம் இன்றி விற்பனையாகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வெங்காயம் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், தற்போது புதிய வெங்காயம், பழைய வெங்காயம் என மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். இதில் முதல் தரத்தை இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்கிறோம்.

இங்கிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்க்கெட் செயல்படும் மூன்று நாட்களில் ஒரு நாளைக்கு 60 டன் வரை வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது 25 டன் மட்டுமே வெங்காய ஏற்றுமதி நடக்கிறது.

இதற்கு காரணம் தேவைகள் குறைவு மற்றும் பிற நாடுகள் அங்கு வெங்காயம் அனுப்புவதுதான். பருவமழை தொடங்கினால் வெங்காய வரத்து குறையும் போது விலை உயர வாய்ப்புள்ளது. ஆடிக்கு பிறகு தேவை அதிகரிக்கும் என்பதாலும் விலை அதிகரிக்கலாம் என்றார்.

திண்டுக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி
சைவம், வைணவம் குறித்த சர்ச்சை கருத்து வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடி மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in