

ராமேசுவரம்: ராமேசுவரம் - மங்களூரு இடையே புதிய வாராந்திர ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
மதுரை வழியாக ராமேசுவரம் - மங்களூரு புதிய வாராந்திர ரயில் சேவைகளைத் தொடங்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ராமேசுவரம் - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16621 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும்.
வண்டி எண் 16622 சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணிக்கு ராமேசுவரத்தை அடையும். இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, கன்னூர், காசர்கோட், மங்களூரு சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 11) திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் - மங்களூரு இடையே புதிய வாராந்திர ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.