கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நிதி ஆயோக் ஒப்புதல்

விமான நிலைய இயக்குநர் தகவல்
கோவை விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப் | படம்: ஜெ.மனோகரன்

கோவை விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப் | படம்: ஜெ.மனோகரன்

Updated on
2 min read

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்ட மாஸ்டர் பிளானுக்கு நிதி ஆயோக் ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பின்னர் பணிகள் தொடங்கப்படும் எனவும் விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப் இன்று (செப்.16) செய்தியாளர்களிடம் கூறியவது: “விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறந்த சேவையை வழங்கும் வகையில் பயணிகள் சேவை இயக்கம் (யாத்ரிசேவா அபியான்) என்ற திட்டம் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை மொத்தம் 24 நாட்கள் நடைபெற உள்ளன. பயணிகளுக்கு விமான பயணத்தை எளிதாக்கவும், வசதிகளை மேம்படுத்தவும் இப்பிரசாரம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கலசார நிகழ்ச்சிகள், வழிகாட்டுதல், மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளது.

கோவை விமான நிலையம் தற்போது 400 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுகிறது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக 627 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 621 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு, விமான நிலைய ஆணையகத்திடம் வழங்கியுள்ளது. மீதமுள்ள 6 ஏக்கர் நிலம் விரைவில் வழங்கப்படும்.

முதல்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. ஒரு பகுதியில் வழிப்பாதைக்கு இடம் வழங்குவது தொடர்பாக நில உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தந்துள்ளது. விமான நிலையம், விரிவாக்கப் பணிகள் முடிந்த பின்னர் 1,047 ஏக்கராக அதிகரிக்கும். விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, விமான நிலைய விரிவாக்க பணிகள் ரூ.2,132 கோடியில் செய்யப்பட உள்ளது.

தற்போது உள்ள ஓடுபாதையின் நீளத்தை அதிகரித்தல், ஓடுபாதைக்கு மறுபுறம் பிரம்மாண்டமான முறையில் புதிய வருகை, புறப்பாடு டெர்மினல் கட்டிடம், பயணிகள் வசதிக்கு பல்வேறு உள்கட்டமைப்பு அமைத்தல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கான மாஸ்டர் பிளானுக்கு, ‘நிதி ஆயோக்’ ஒப்புதல் வழங்கிவிட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் விரிவாக்க பணிகள் தொடங்கும். மூன்று ஆண்டுகளில் கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடையும்.

தற்போது கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 26 விமானங்கள் இயக்கப்படுகின்றன. வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை 30 ஆக உயரும்.

தற்போதைய இடநெரிசலை குறைக்கும் வகையில் உள்நாட்டு பாதுகாப்பு சோதனை பகுதி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதனால், கூடுதலாக 1,000 சதுரமீட்டர் பரப்பளவு கிடைக்கும். இந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும்.

விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தொடர்ந்து புகார் வந்து கொண்டு இருக்கிறது. எனவே, தற்போதைய ஒப்பந்ததாரரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நிமிடங்களுக்கு மேல் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 அபராதம் விதிப்பது ஒப்பந்ததாரர் அல்ல. அது ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) மூலம் விதிக்கப்படுவது ஆகும்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கோவை விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப் | படம்: ஜெ.மனோகரன்</p></div>
ராமசாமி படையாச்சியர் 109-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ் வணக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in