

புதுடெல்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (எப்டிஏ) கீழ், இந்திய பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில் சட்டங்களை திருத்த நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் ஒயின் மற்றும் ஸ்பிரிட் தவிர்த்து ஏனைய பொருட்களின் பதிவை எளிதாக்குவதற்காக சட்டத்தை திருத்துவது உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை முடிப்பதற்கான காலக்கெடு, எப்டிஏ நடைமுறைக்கு வந்ததிலிருந்து 18 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் தற்போதைய புவிசார் குறியீடு சட்டம், இந்தியாவின் ஒயின், ஸ்பிரிட்ஸ் ஆகியவற்றை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கிறது.
அறிவுசார் சொத்துரிமையான புவிசார் குறியீடு என்பது, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து உருவாகும் விவசாய, இயற்கை அல்லது உற்பத்திப் பொருளுக்கு வழங்கப்படும் அங்கீகாரம். பொதுவாக, புவிசார் குறியீடானது தரம் மற்றும் தனித்துவத்திற்கான ஓர் உத்தரவாதத்தை அளிக்கிறது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு முத்திரை கிடைத்தவுடன், எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ அதே பெயரில் ஒத்த பொருளை விற்க முடியாது.
நியூசிலாந்துக்கு ஆப்பிள்கள், கிவிப் பழங்கள் மற்றும் மனுக்காதேன் ஆகியவற்றுக்காக இந்தியா ஒதுக்கீடு அடிப்படையிலான வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. இது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அந்த நாடு உறுதியளித்த விவசாய உற்பத்தித்திறன் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் இணைக்கப்பட்டுள்ளது.