

சென்னை: சோழிங்கநல்லூர் எல்காட் நிறுவனத்தில் ரூ.84.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்குதல், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (‘எல்காட்’) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூரில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை எல்காட் நிறுவியுள்ளது.
3 ஆயிரம் பேருக்கு வேலை: இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2.33 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.84.42 கோடி செலவில் 11 தளங்களுடன் எல்காட் தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழக தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு, 24 மணிநேர பாதுகாப்பு வசதி, பசுமை மின்சக்தி பயன்பாடு, நீர் மேலாண்மை கட்டமைப்பு என பல வசதிகளுடன் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கா.ப.கார்த்திகேயன், நிர்வாக இயக்குநர் வெ.தீபனா விஸ்வேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.