

சென்னை: தமிழகத்தில் அதிக அளவில் உலகளாவிய திறன் மையங்களை (ஜிசிசி) அமைப்பது தொடர்பாக பன்னாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. செலவைக் குறைக்கவும் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் செயல்பாடுகளை மேம்படுத்தவும் பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் ‘ஜிசிசி’ எனப்படும் உலகளாவிய திறன் மையங்களை அமைத்து வருகின்றன.
அந்த வகையில், தமிழக அரசின் தொழில் வழிகாட்டு மையம், ஏஎன்எஸ்ஆர் என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
ஏஎன்எஸ்ஆர் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்கள் மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய திறன் மையங்களை நிறுவி வரும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும்.
மேலும், ஏஐ தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் வணிகம், ஆராாய்ச்சி மற்றும் மேம்பாடு, டேட்டா சயின்ஸ் என பலதரப்பட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்று திகழ்கிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது: “தமிழகத்தில் அதிக அளவில் உலகளாவிய திறன் மையங்கள் (ஜிசிசி) வருவதற்கு ஏஎன்எஸ்ஆர் நிறுவனம் உதவும்.
ஜிசிசி அமைப்பதற்கு உகந்த கொள்கைகள், உடனடி அனுமதி, தேவைப்படும் இடங்களை ஒதுக்கீடு செய்வது, திறமையான பணியாளர்கள் கிடைக்கச் செய்வது என தமிழக அரசு அனைத்து விதமான ஆதரவையும் அளிக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.